இயக்குநர் மணிகண்டன் வீட்டில் திருடுபோன தேசிய விருதுகளைத் திருடியவர்கள் மீண்டும் வந்து அந்தப் பதக்கங்களை அவரது வீட்டிலேயே வைத்து விட்டுச் சென்றுள்ளனர்.
‘காக்கா முட்டை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராகத் தனக்கென்று ஓர் இடத்தை பிடித்த மணிகண்டன் ‘கடைசி விவசாயி’, ‘குற்றமே தண்டனை’, ‘ஆண்டவன் கட்டளை’ போன்ற தரமான படங்களை இயக்கியிருக்கிறார். இதில் ‘காக்கா முட்டை’ படத்திற்காகவும், ‘கடைசி விவசாயி’ படத்திற்காகவும் தேசிய விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

இதனிடையே கடந்த வாரம் (பிப்ரவரி 8) அவரது சொந்த ஊரான உசிலம்பட்டியில் அவருடைய வீட்டில் கொள்ளை சம்பவம் நடந்தது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. மணிகண்டன் சென்னையில் தனது அடுத்த படத்தின் வேலைக்காகக் குடும்பத்துடன் இருந்த சமயத்தில், அவரது உசிலம்பட்டி வீட்டின் பூட்டை உடைத்து சில மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர். இந்தக் கொள்ளை சம்பவத்தில் 5 பவுன் தங்க நகையும், 1 லட்ச ரூபாய் பணமும் மற்றும் தேசிய விருதுக்காக மணிகண்டனுக்கு வழங்கப்பட்ட இரண்டு வெள்ளிப் பதக்கங்களும் திருடப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் அறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில் மணிகண்டன் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட 2 தேசிய விருதுகளையும் மீண்டும் அவரின் வீட்டின் முன்பு மன்னிப்பு கடிதத்துடன் திருடர்கள் வைத்துச் சென்றுள்ளனர்.

ஒரு பாலிதீன் பையில் பதக்கங்களை மட்டும் வைத்தவர்கள், கடிதத்தில், “அய்யா எங்களை மன்னித்துவிடுங்கள். உங்கள் உழைப்பு உங்களுக்கு” என்று எழுதிவைத்துள்ளனர். இது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.