“காங்கிரஸ் தலைவருக்கு நன்றி…” – அசோக் சவானின் அனிச்சைப் பேச்சும், திருத்திய பட்நாவிஸும்!

மும்பை: மகாராஷ்டிரா காங்கிரஸின் முக்கிய முகங்களில் ஒருவராகப் பார்க்கப்பட்ட அசோக் சவான் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்திலிருந்தும் விலகிய நிலையில் இன்று அவர் பாஜகவில் இணைந்தார். மும்பையில் உள்ள பாஜக அலுவலகத்தில் நடந்த நிகழ்வில் மும்பை பாஜக தலைவர் ஆஷிஷ் ஷெலார், மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் ஆகியோர் இருந்தனர்.

அப்போது கட்சியில் இணைந்த அசோக் சவான் முதன்முறையாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “மும்பை காங்கிரஸ் தலைவருக்கு நான் நன்றியை…” என்று அனிச்சையாக பழக்கதோஷத்தில் காங்கிரஸைக் குறிப்பிட, உடனடியாக அவரைத் தடுத்த பட்நாவிஸ் ‘பாஜக’ என்று மாற்றினார். அதற்குள் பாஜக தொண்டர்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது.

நிலைமையை உணர்ந்து கொண்ட அசோக் சவான், “நான் இப்போதுதான் பாஜகவில் இணைந்தேன். அதனால்தான் இந்த தவறு. நான் இப்போது என் அரசியல் வாழ்வில் ஒரு புதிய பயணத்தைத் தொடங்குகிறேன். 38 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் இருந்ததால் அதையே சொல்லிவிட்டேன். பாஜக அலுவலகத்தில் இதுதான் எனது முதல் பத்திரிகையாளர் சந்திப்பு. நான் காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது அவர்களுக்கு விசுவாசமாக நடந்தேன். இனி பாஜக வெற்றிக்கு உழைப்பேன். அது மக்களவைத் தேர்தலாக இருந்தாலும் சரி, சட்டப்பேரவைத் தேர்தலாக இருந்தாலும் சரி பாஜக வெற்றிக்கு பாடுபடுவேன். நான் இதுவரை இருந்த கட்சி பற்றி ஏதும் விமர்சிக்க விரும்பவில்லை.

மகாராஷ்டிரா அரசியலுக்கு என்றொரு தன்மை இருக்கிறது. எதிர்க்கட்சியை வீழ்த்துவது மட்டுமே மகாராஷ்டிர அரசியல் தலைவர்களின் நோக்கமாக இருந்ததில்லை. மாநில நலனே மகாராஷ்டிரா அரசியல்வாதிகளுக்குப் பிரதானம். நம் மண் பெருந்தலைவர்களைக் கொண்ட பாரம்பரியம் மிக்கது. அவர்கள் மாநில வளர்ச்சிக்காகப் பாடுபட்டவர்கள். அந்த வழியில் தான் நானும் நடக்கிறேன்.

நான் பாஜகவில் இணைந்தது எனது தனிப்பட்ட முடிவு. கடைசி நிமிடம் வரை நான் எனது முன்னாள் சகாக்களுடன் இருந்தேன். ஆனால் நிலவரம் நானொரு முடிவெடுக்க நிர்பந்தித்தது. பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை மாநிலம் பெறவே இந்த முடிவை எடுத்தேன்” என்றார்.

இன்னும் இரண்டு மாதங்களில் மக்களவைத் தேர்தல் வர உள்ள நிலையில், இந்த ஆண்டு அக்டோபருக்குள் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அசோக் சவான் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தது அக்கட்சிக்கு மிகப் பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

ஏற்கெனவே, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மிலிந்த் தியோரா சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனா கட்சியிலும், பாபா சித்திக்கி, அஜித் பவாரின் கட்சியிலும் இணைந்தனர். இந்த நிலையில் அசோக் சவான் காங்கிரஸில் இருந்து விலகியதோடு, பாஜகவிலும் இணைவது சிக்கலை ஏற்படுத்தியது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.