பாட்னா: பிஹார் சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான பாஜக கூட்டணி அரசு வெற்றி பெற்றது.
பிஹாரில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தள கூட்டணி அரசு கடந்த ஜனவரியில் கவிழ்ந்தது. ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் பாஜகவுடன் கூட்டணி அமைத்து கடந்த ஜனவரி 28-ம் தேதி புதிய அரசை அமைத்தார். முதல்வராக நிதிஷ் குமாரும், பாஜகவை சேர்ந்த சாம்ராட் சவுத்ரி, விஜய் சின்ஹா துணை முதல்வர்களாகவும் பதவியேற்றனர்.
இந்த சூழலில் பிஹார் சட்டப்பேரவை நேற்று கூடியது. முதலில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உரையாற்றினார். அவர் உரையாற்றும்போது ராஷ்டிரிய ஜனதா தள எம்எல்ஏக்கள் கோஷங்களை எழுப்பினர்.
அவைத் தலைவர் நீக்கம்: பிஹார் சட்டப்பேரவையின் தலைவராக ராஷ்டிரிய ஜனதா தளத்தை சேர்ந்த அவாத் பிஹாரி சவுத்ரி பதவி வகித்தார். ஆளுநர் உரை நிறைவடைந்ததும் பேரவைத் தலைவருக்கு எதிராக ஆளும் கூட்டணி சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் தீர்மானத்தை ஆதரித்து 125 வாக்குகளும் எதிராக 112 வாக்குகளும் பதிவாகின. இதன்மூலம் அவைத் தலைவர் பதவியில் இருந்து அவாத் பிஹாரி சவுத்ரி நீக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான விவாதம் நடைபெற்றது. இதில் ராஷ்டிரியஜனதா தள மூத்த தலைவர் தேஜஸ்வி யாதவ் பேசியதாவது:
இதுவரை 9 முறை முதல்வராக பதவியேற்று சாதனை படைத்த நிதிஷ் குமாருக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். ஒரு சட்டப்பேரவை காலத்தில் 3 முறை அவர் அணி மாறுகிறார். நிதிஷ் குமார் மீண்டும் அணி மாற மாட்டார் என்பதற்கு பிரதமர் நரேந்திர மோடியால் உத்தரவாதம் அளிக்க முடியுமா? மோடியை தடுத்து நிறுத்துவோம் என்று நிதிஷ் உறுதி அளித்தார். அவரை எங்கள் குடும்ப உறுப்பினர் போல கருதினோம். ஆனால் அவர் ஏமாற்றிவிட்டார். தற்போதைய துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி முதலில் எங்கள் கட்சியில் இருந்தார். அவரும் அடிக்கடி கட்சி மாறிக் கொண்டிருக்கிறார். வரும் தேர்தலில் நீங்கள் எப்படி மக்களை சந்திப்பீர்கள்? இவ்வாறு தேஜஸ்வி யாதவ் பேசினார்.
முதல்வர் நிதிஷ் குமார் பேசியதாவது: கடந்த காலங்களில் தேஜஸ்வி யாதவின் தந்தை (லாலு), தாய் (ரப்ரி தேவி) ஆகியோர் பிஹாரை ஆட்சி செய்தனர். சுமார் 15 ஆண்டுகள் அவர்கள் ஆட்சி நடத்தினர். அப்போது பிஹாரின் நிலை என்னவாக இருந்தது என்பது அனைவருக்கும் தெரியும்.
கடந்த 2005-ம் ஆண்டு முதல் பிஹார் முதல்வராக இருந்து மக்களுக்கு சேவையாற்றி கொண்டிருக்கிறேன். கடந்த 15 ஆண்டுகளில் பிஹாரின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை வெற்றிகரமாக அமல்படுத்தி உள்ளேன். மக்களின் நலன் கருதி எனது பழைய இடத்துக்கு (பாஜக கூட்டணி) திரும்பி உள்ளேன். இவ்வாறு அவர் பேசினார்.
நிதிஷ் குமார் பேசியபோது, ராஷ்டிரிய ஜனதா தள எம்எல்ஏக்கள் எழுந்து நின்று அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவர் பேச்சை பாதியில் நிறுத்தினார்.
இதைத் தொடர்ந்து வாக்கெடுப்பு நடைபெற்றது. முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான அரசுக்கு ஆதரவாக 129 வாக்குகள் பதிவாகின. எதிர்க்கட்சிகள் வாக்கெடுப்பை புறக்கணித்து வெளிநடப்பு செய்தன. பெரும்பான்மையை நிரூபிக்க 122 வாக்குகள் தேவை என்ற நிலையில் 129 வாக்குகளைப் பெற்று நிதிஷ் தலைமையிலான பாஜக கூட்டணி அரசு வெற்றி பெற்றது.
அணி மாறிய எம்எல்ஏக்கள்: பாஜக 78, ஐக்கிய ஜனதா தளம் 45, இந்துஸ்தான் அவாமி மோர்ச்சா4, ஒரு சுயேச்சை எம்எல்ஏ என ஆளும் பாஜக கூட்டணிக்கு 128 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக ஆளுநரிடம் கடிதம் அளிக்கப்பட்டது. நம்பிக்கை வாக்கெடுப்பின்போது ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த திலீப் ராய், பிமா பாரதி ஆகியோர் சட்டப்பேரவைக்கு வரவில்லை. 2 எம்எல்ஏக்களும் கடத்தப்பட்டிருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இதன்காரணமாக ஆளும் கூட்டணியின் பலம் 126 ஆக குறைந்தது.
இந்தசூழலில் ராஷ்டிரிய ஜனதா தளத்தை சேர்ந்த சேத்தன் ஆனந்த், நீலம் தேவி, பிரகலாத் யாதவ் ஆகியோர் நேற்று சட்டப்பேரவையில் ஆளும் கட்சி வரிசையில் அமர்ந்து நிதிஷ் குமார் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதன்காரணமாக ஆளும் பாஜக கூட்டணிக்கு 129 வாக்குகள் கிடைத்தன.