தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர் தி.மு.க-வின் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட முன்னாள் துணை செயலாளர். இவரின் மருமகள் சாந்தி சேகர், பேராவூரணி பேரூராட்சித் தலைவராக இருக்கிறார். இவரின் மகன் சேகர், பேராவூரணி நகரச் செயலாளராக இருக்கிறார். இந்நிலையில் செல்வராஜிடம் பெண் ஒருவர் பணம் குறித்து ஆவேசமாகப் பேசியதாக ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வருவது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த ஆடியோவில் பேசும் பெண், “நீங்க பேசுறதுக்கு தகுதியே இல்லை, இப்ப நான் உங்க வீட்டுக்கு வருவேன். நான் எப்படி உங்களுக்கு கேஷாகக் கொடுத்தேனோ, அதேபோல் எனக்கு இப்ப வட்டியோடு சேர்த்து ரூ.15 லட்சம் கொடுத்துவிட வேண்டும். இல்லை என்றால், இதை நான் விட மாட்டேன், நேரில் வருவேன். சி.எம் செல்லிருந்து பேசச் சொல்வேன்” என்கிறார். எதிர்முனையில் செல்வராஜ் பேசுவதுபோல், “இந்தா பாருங்கம்மா, உங்க வீட்டுக்கு வருகிறோம் அதோடு போனை வையுங்கள்” என்கிறார்.
“நாளைக்கு வந்து என்ன சொல்லப்போறீங்க… விவரத்தைச் சொல்லுங்க”னு அந்தப் பெண் கேட்கிறார். அதற்கு, “நாளைக்கு வந்து முடித்து விடுகிறேன்” என்கிறார் செல்வராஜ். மீண்டும் அந்தப் பெண், “என்னத்தை முடிக்கப் போறீங்க, விவரத்தைச் சொல்லுங்க… பணத்தை முடித்து வைக்கப் போறேன்”னு சொல்லுங்க என்கிறார். அதற்கு செல்வராஜ், “பணத்தைக் கொண்டு வருகிறேன்” என்கிறார். “உங்க வாயால் சொன்னால்தான் பணத்தைத் தருவீர்கள்” என்கிறார் அந்தப் பெண்.
“போனை வையுங்கள்” என்கிறார் செல்வராஜ், “வைக்க முடியாது, நான் உங்கள் வீட்டுக்கு வரத்தான் போறேன்” என்கிறார் அந்தப் பெண். “நாளைக்குதானே டைம் சொன்னது, வர்றேன் எனச் சொல்லிட்டோம்” எனக் கூறும் செல்வராட்ஜிடம், “நான் இதுக்கு மேல் டைம் கொடுக்க மாட்டேன், என் வீடுக்காரரை நீங்க ஏமாற்றியுள்ளீர்கள், நான் உங்க வீட்டுக்கு வரத்தான் போறேன்’ என்கிறார்.
“பணம் கொடுத்து ஒரு மாதம் ஆகிவிட்டது, எனக்கு வட்டியுடன் சேர்த்து ரூ.15 லட்சம் கொடுக்கணும்” எனக் கூறும் பென்ணிடம், “15 லட்சத்தைக் கொடுத்து விடுகிறேன்” என்கிறார் செல்வராஜ். “உங்களை நம்ப முடியவில்லை. நேற்று காரில் சென்றீர்கள். ஆனால், சென்னையில் இருப்பதாக பொய் சொல்கிறீர்கள். எப்படி உங்களை நம்புறது, உங்ககிட்ட இல்லாத பணமா… வட்டிக்கு வாங்கிதானே பணம் கொடுத்தேன், நாளைக்கு ரூ.15 லட்சத்துடன் வீட்டுக்கு வர வேண்டும்” என அந்தப் பெண் கூறுவதுடன், அந்த ஆடியோ முடிகிறது.

இது குறித்து பேராவூரணி பகுதியில் சிலரிடம் பேசினோம். “ஆடியோவில் பேசும் பெண்ணின் கணவர் அரசு அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளராக இருப்பதாகத் தெரிகிறது. வேறு இடத்துக்கு ட்ரான்ஸ்ஃபர் வாங்கிக் கொடுப்பதற்காக, செல்வராஜ் அந்த உதவி செயற்பொறியாளரிடம் ரூ.14 லட்சம் வாங்கியதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் குறித்த நேரத்தில் ட்ரான்ஸ்ஃபர் பெற்றுத்தர முடியவில்லை. இதனால் ஆவேசமடைந்த உதவி செயற்பொறியாளரின் மனைவி, செல்வராஜுக்கு போன் செய்து, வட்டியுடன் சேர்த்து ரூ.15 லட்சம் தர வேண்டும் எனப் பேசியதாகச் சொல்லப்படுகிறது.
போனில் இருவருக்கும் நடந்த உரையாடலை யாரோ ஒருவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்” என்று தெரிவித்தனர். இது குறித்து விளக்கம் கேட்டு செல்வராஜிடம் பேசினோம். “அந்த ஆடியோவில் பேசுவது நான் இல்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என்மீது களங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், வேண்டும் என்றே சிலர் ஆடியோவில் நான் பேசுவதாகக் கூறி தவறான தகவலைப் பரப்புகின்றனர்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY