`அர்ஜுன் ரெட்டி’ படத்தை இயக்கிய இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான `அனிமல்’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூலைக் குவித்திருந்தாலும் ஆணாதிக்கச் சிந்தனை கொண்ட திரைப்படமாக இருக்கிறது என்று கடுமையான விமர்சனங்களைப் பெற்றது. ஒரு சிலர் இப்படத்திற்கு எதிர்மறையான கருத்துகளைத் தெரிவித்திருந்தாலும் சிலர் நேர்மறையான கருத்துகளையும் தெரிவித்து இருந்தனர்.

அந்த வகையில் ‘காலா’, ‘வலிமை’ போன்ற படங்களில் நடித்த பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி, ‘அனிமல்’ படத்தைப் பாராட்டிப் பேசியிருக்கிறார்.
இதுகுறித்து பேசிய அவர், “’அனிமல் படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அப்படத்தை நான் ரசித்தேன். அதன் மாச்சிஸ்மோ (ஆண் மையப் பார்வை), ஆக்ஷன் மற்றும் இசை எனக்குப் பிடித்திருந்தது.
எல்லா வகையான படங்களையும் உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஒரு பார்வையாளர் என்ற முறையில் அந்தப் படத்தை நீங்கள் பார்க்க விரும்புகிறீர்களா, இல்லையா என்பது உங்கள் விருப்பம்.
ஆனால், ‘அனிமல்’ படம் போல, கையில் இயந்திரத் துப்பாக்கியை வைத்துக்கொண்டு பலரைக் கொல்வது போன்ற ஆக்ஷன் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கும் இருக்கிறது. ‘The Wolf of Wall Street’, ‘Animal’ போன்ற படங்கள் ஒரு நடிகராக என்றுமே உற்சாகம் அளிப்பவைதான்” என்றவர், இவ்வகை படங்களின் பிரச்னைகள் குறித்தும் பேசினார்.

“சமுதாயத்தில் இவ்வகை படங்களின் தாக்கம் குறித்த விவாதமும் அவசியமானதுதான். அதே சமயம், பல நல்ல படங்கள் வந்தும் சமுதாயம் மாறாமல் இருப்பதும் கவனிக்க வேண்டிய ஒன்று. ‘அனிமல்’லோ, நான் நடித்த ‘மஹாராணி’ வெப் சீரிஸோ, மக்கள் வரவேற்பு அளிக்கும் வரை இவ்வகை படைப்புகள் வந்துகொண்டுதான் இருக்கும்” என்று முடித்தார் ஹூமா குரேஷி.