Kerala refuses to display PMs picture in ration shops | ரேஷன் கடைகளில் பிரதமர் படம் வைக்க கேரளா மறுப்பு

திருவனந்தபுரம், “ரேஷன் கடைகளில், பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை வைக்க வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவை ஏற்க முடியாது,” என, கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.

இங்கு, சட்டசபை கூட்டத் தொடரில் நேற்று பேசிய உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சுரேஷ் கூறுகையில், ”கேரளாவில் உள்ள 14,000 ரேஷன் கடைகளில் பிரதமரின் புகைப்படம் அடங்கிய பேனர்கள் வைக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

”அதேபோல், தேர்ந்தெடுக்கப்பட்ட 550 ரேஷன் கடைகளில், பிரதமரின் செல்பி பாயின்ட்களை நிறுவவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது,” என்றார்.

இது குறித்து, ஐ.யு.எம்.எல்., – எம்.எல்.ஏ., அப்துல் ஹமீது எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், ”ரேஷன் கடைகளில் தேசிய உணவு பாதுகாப்பு சட்ட இலட்சினை உடன், பிரதமரின் புகைப்படத்தை வைப்பதற்கும், செல்பி பாயின்ட் உருவாக்குவதற்குமான மத்திய அரசின் உத்தரவை ஏற்கப் போவதில்லை.

”லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் சூழலில், இது பிரசாரத்தில் ஒரு யுக்தியாகவே கருதப்படுகிறது. இது சரியல்ல என மத்திய அரசுக்கு தெரிவிக்கப்படும். இந்த விவகாரத்தில் தேர்தல் கமிஷனை அணுகுவது குறித்தும் ஆலோசிக்கப்படும்,” என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.