புதுடில்லி, முந்தைய காங்., ஆட்சியில் வழங்கப்பட்டதை விட, கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் ஒன்றரை மடங்கு அதிக வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
மத்திய அரசின் பல்வேறு துறைகளிலும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும், ‘ரோஜ்கர் மேளா’ திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், இந்த திட்டத்தின் கீழ், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு பணி நியமன ஆணையை பிரதமர் நரேந்திர மோடி, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக நேற்று வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:
காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, அரசு பணிகளில் ஆட்சேர்ப்பு நடவடிக்கைக்கு நீண்டகாலம் எடுத்துக் கொள்ளப்பட்டது; இது, ஊழலை பெருக்கியது.
இந்த ஆட்சியில் ஆட்சேர்ப்பு பணிகள் வெளிப்படை தன்மையுடனும், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள்ளும் செய்து முடிக்கப்படுகின்றன.
கடின உழைப்பு மற்றும் திறமை இருந்தால், அரசு பணியில் சேர சம வாய்ப்புகள் வழங்கப்படும் என்ற நம்பிக்கை இளைஞர்கள் மனதில் பிறந்துள்ளது.
மத்திய அரசின் சூரிய ஒளி மின் திட்டம், ஒரு கோடி வீடு கட்டும் திட்டம், உட்கட்டமைப்பில் பெரும் முதலீடு ஆகியவை வேலை வாய்ப்புகளை அதிகரித்துள்ளன.
நம் நாட்டில், 1.25 லட்சத்துக்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் துவங்கப்பட்டுள்ளன. இத்துறையில் நம் நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது. சிறிய நகரங்களில் கூட இளைஞர்கள் புதிய நிறுவனங்களை துவங்குவதால் வேலை வாய்ப்புகள் பெருகி உள்ளன.
தேசத்தை கட்டியெழுப்புவதில் இளைஞர்களின் பங்களிப்பை மேம்படுத்தும் பணியில் அரசின் வேலைவாய்ப்பு திட்டங்கள் முக்கியப் பங்காற்றி வருகின்றன.
மத்திய ஆயுதப்படைகளில் மிகப் பெரிய எண்ணிக்கையில் இளைஞர்கள் சேர்ந்துள்ளனர். பணிக்கான எழுத்துத் தேர்வு, ஹிந்தி, ஆங்கிலம் தவிர 13 பிராந்திய மொழிகளில் நடத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்