மாஸ்டர், விக்ரம் போன்ற படங்களில் இணை இயக்குநராக பணியாற்றியவர் வெங்கி.
தற்போது அவர் நடிகர் சதீஷை வைத்து ‘வித்தைக்காரன்’ என்ற திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். ஒயிட் கார்ப்பெட் பிலிம்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தில் சிம்ரன் குப்தா, தாரிணி, ஆனந்தராஜ், மதுசூதனன், சுப்ரமணியம் சிவா உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படம் வரும் பிப்ரவரி 21 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில் நடிகர் சதீஷ், நடிகர் விஜய் மற்றும் உதயநிதி ஸ்டாலின் குறித்து பேசியிருக்கிறார்.

விஜய் குறித்து பேசிய சதீஷ், “ நடிகர் விஜய் கட்சியின் பெயரை அறிமுகம் செய்யும் முன்பு அவரை நான் சந்தித்தேன். அப்போது கான்ஜூரிங் கண்ணப்பன் சூப்பர்ஹிட் என்று சொன்னார். அதை அவர் சொல்லி கேட்கும்போது சந்தோஷமாக இருந்தது. அதைப்பற்றி என்னிடம் பேச நினைத்திருக்கிறார் என்பது நான் சினிமாவுக்கு வந்ததற்கான பலன்களுள் ஒன்றாக நினைக்கிறேன். கட்சி தொடங்கி இருக்கும் அவருக்கு என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்து கொள்கிறேன்” என்றார்.
பிறகு உதயநிதி குறித்து பேசிய அவர்,” உதயநிதி ஸ்டாலின் ரொம்ப நாளாக ஒரே போன் நம்பர்தான் வைத்திருக்கிறார். நடிகராக இருக்கும் போதிலிருந்து எப்போது ஃபோன் பண்ணாலும் எடுத்து பேசுவார். இப்போது அமைச்சராக முக்கிய பொறுப்பில் இருக்கும்போதும் கூட ஃபோன் பண்ணினால் எடுத்துப் பேசி பிரச்னையைத் தீர்க்கக்கூடியவர்.

நான் பார்த்ததிலேயே மிகச்சிறந்த நபர் உதயநிதி ஸ்டாலின்தான். அந்தத் தன்மை நிச்சயமாக அவரை மிகப்பெரிய இடத்துக்கு கொண்டு செல்லும் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.