மாதவிடாயைத் தள்ளிப்போடும் மாத்திரைகள்… இவற்றில் எல்லாம் கவனமாக இருக்க வேண்டும்!

நம் ஊரைப் பொறுத்தவரையில் கல்யாணம் போன்ற குடும்ப விழாக்கள், குடும்பத்துடன் சேர்ந்து டூர் போவது, தவிர்க்க முடியாத கோயில் பயணங்கள் போன்ற காரணங்களுக்காக, சில பெண்கள் மாதவிடாயைத் தள்ளிப்போட நினைப்பதுண்டு. இதற்காக அவர்கள் மாத்திரைகளைப் பயன்டுத்துவதும் வழக்கத்தில் உள்ளது.

மாதவிடாய்

அப்படி, மாதவிடாயைத் தள்ளிப்போடுவதற்கு அவர்கள் பயன்படுத்தும் மாத்திரைகள் பாதுகாப்பானவையா? அந்த மாத்திரைகளை அடிக்கடி சாப்பிடலாமா? எவற்றிலெல்லாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்? எவற்றையெல்லாம் செய்யக் கூடாது? மாதவிடாயைத் தள்ளிப்போட நினைக்கும் பெண்கள் அறிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன? சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் வைஷ்ணவி அளிக்கும் தெளிவான விளக்கங்கள் உங்களுக்காக…

சுயமருத்துவம் கூடவே கூடாது!

“மாதவிடாயை, மாத்திரைகளின் உதவியோடு தள்ளிப் போடுவதை ஒரு மகப்பேறு மருத்துவரின் வழிகாட்டுதலுடன் செய்தால் அது பாதுகாப்பான ஒன்று. ஆனால், மருத்துவரைப் பார்க்காமல் தாங்களாகவே மருந்துக் கடைகளில் மாத்திரைகளை வாங்கிப் பயன்படுத்தக்கூடாது என்பதை மருத்துவர்களாகிய நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். எனவே, இந்த விஷயத்தில் பெண்கள் அலட்சியமாக இருக்கக்கூடாது. குறிப்பாக தாங்களாகவே மெடிக்கல் ஷாப்பில் மாத்திரைகளை வாங்கிப் போடக்கூடாது.

மருத்துவர் வைஷ்ணவி

கேட்டவுடன் மாத்திரை கொடுக்கப்பட மாட்டாது!

மாதவிடாயைத் தள்ளிப்போட வேண்டும் என்ற எண்ணத்துடன் வருபவர்களுக்கு மருத்துவர்களாகிய நாங்கள், உடனே மாத்திரையை எழுதிக்கொடுத்து விடமாட்டோம். முதலில், அவர்களது உடல்நலம் குறித்து முழுமையாகத் தெரிந்துகொள்வோம். அதற்காக பெரிய பரிசோதனைகளையெல்லாம் செய்யவேண்டிய தேவை இருக்காது. ஆனால், அவர்களிடம் விரிவான உரையாடலை மேற்கொண்டு, அவர்களது உடல்நலம் குறித்துப் புரிந்துகொள்வோம். குறிப்பாக, அவர்களுக்கு உடல்ரீதியில் ஏதேனும் பிரச்னைகள் இருந்தால் அதையும் கவனமாகக் கேட்டறிவோம்.

எங்களிடம், மாதவிடாயைத் தள்ளிப்போட மாத்திரையைக் கேட்டு வரும் அனைவரையுமே நாங்கள் ஒரே மாதிரியாகக் கையாளமாட்டோம். திருமணம் ஆனவரா, ஆகாதவரா.. என்பன போன்ற பல விஷயங்களை முழுமையாகக் கேட்டறிந்த பின்னர் அவரது உடல் எடை உட்பட பல விஷயங்களையும் கவனிப்போம். அவர் எத்தனை நாள்களுக்கு மாதவிடாயைத் தள்ளிப்போட நினைக்கிறார் என்பதையும் கேட்டறிந்து அதற்கேற்ப மட்டும்தான் மாத்திரைகளைப் பரிந்துரைப்போம்.

மாத்திரை

பக்கவிளைவுகளைக் கவனியுங்கள் !

மாதவிடாயைத் தள்ளிப் போடுவதற்காக மாத்திரைகளை எடுத்து முடித்த பின்னர், மீண்டும் பீரியட்ஸ் வரும்போது சிலருக்கு பழையபடி நார்மலாக வரும்.சிலருக்கு பீரியட்ஸ் தள்ளிப் போகும். 30 நாள்கள் சுழற்சி உள்ளவர்களுக்கு, சில சமயங்களில் 45 நாள்கள் கழித்தும்கூட வரலாம். சிலருக்கு உதிரப் போக்கு அதிகமாகலாம். மாதவிடாய் சமயத்தில் வயிறு இழுத்துப் பிடிக்கலாம். இன்னும் சொல்லப்போனால், தள்ளிப் போடுவதற்காக மாத்திரைகளை பயன்படுத்தும்போதே சிலருக்கு தசைப்பிடிப்பு உண்டாகலாம். இவைபோன்ற அறிகுறிகள் எதுவும் இல்லாமல் சிலருக்கு மிக நார்மலாகக்கூட பீரியட்ஸ் வரலாம். இவை அனைத்துமே ஆளுக்கு ஆள் மாறுபடும். எனவே, மாதவிலக்கை தள்ளிப் போடுவதற்காக மாத்திரைகளை எடுத்த பின்பு மீண்டும் பீரியட்ஸ் வரும்போது, உங்களுக்கு வழக்கத்திற்கு மாறான அறிகுறிகள் தெரிந்தால் அதை அலட்சியம் செய்யாமல் உங்கள் மகப்பேறு மருத்துவரை உடனே சந்தித்து ஆலோசனை பெறவேண்டியது மிக அவசியம்.

அடிக்கடி எடுத்தால் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல!

மாதவிடாயைத் தள்ளிப் போட மாத்திரைகளை எடுத்தால், அதனால் கருப்பையில் கட்டி வரும், குழந்தை பிறப்பதில் சிக்கல் வரும் என்றெல்லாம் சிலர் சொல்வதுண்டு. ஆனால் அச்செய்திகளில் உண்மை எதுவும் இல்லை. அதே நேரத்தில், எதுவுமே குறிப்பிட்ட எல்லையைத் தாண்டிப் போனால் அது நல்லதில்லை அல்லவா? எனவே, மாதவிடாயைத் தள்ளிப்போடும் மாத்திரைகளை அடிக்கடிப் பயன்படுத்தும்போது உள்ளிருக்கும் ஹார்மோன்கள் தொந்தரவு அடைய (disturb) வாய்ப்பிருக்கிறது.

மாதவிடாய்

மாதவிடாயைத் தள்ளிப் போடுவதற்காகக் கொடுக்கப்படும் மாத்திரைகள், ஹார்மோன் மாத்திரைகள். எனவே, வெளியிலிருந்து திரும்பத் திரும்ப ஹார்மோன்களைக் கொடுக்கும்போது, அதனால், உடலில் ஏற்கெனவே இருக்கும் ஹார்மோன்களில் சமநிலையின்மை (imbalance) ஏற்பட்டுவிடும். எனவே, மாதவிடாயைத் தள்ளிப் போடுவதற்கான மாத்திரைகளை அடிக்கடி பயன்படுத்தாமல் இருப்பது நல்லது” என்கிறார் மகப்பேறு மருத்துவர் வைஷ்ணவி.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.