Law and order problem: Ruling party and opposition members discuss chaos in the assembly | சட்டம் – ஒழுங்கு பிரச்னை: சட்டசபையில் காரசாரம் ஆளுங்கட்சி – எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விவாதம்

பெங்களூரு : கர்நாடக மாநிலத்தில் சட்டம் – ஒழுங்கு பிரச்னை குறித்து விவாதிக்க வாய்ப்பு வழங்கப்படாததால், ஆளுங்கட்சி – எதிர்க்கட்சியிடையே கர்நாடக சட்டசபையில் நேற்று காரசார விவாதம் நடந்தது.

கர்நாடக சட்டசபை கூட்டத்தொடரின் இரண்டாம் நாளான நேற்று காலை கூட்டம் துவங்கியதும், கேள்வி நேரம் நடத்தப்படும் என்று சபாநாயகர் காதர் அறிவித்தார்.

அப்போது நடந்த விவாதம்:

எதிர்க்கட்சி தலைவர் அசோக்: மாநிலத்தில் சட்டம் – ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது தொடர்பாக, ஒத்திவைப்பு தீர்மானத்தின் கீழ் விவாதிக்க வேண்டும் என்று ஏற்கனவே கடிதம் கொடுத்துள்ளோம். கேள்வி நேரத்தை ஒத்தி வைத்து விட்டு, சட்டம் – ஒழுங்கு பிரச்னை குறித்து விவாதிக்க வாய்ப்பு தர வேண்டும்.

ஹாவேரியில் ஒரு பெண் மீது கூட்டு பலாத்காரம் நடந்துள்ளது. பெலகாவியில் பெண்ணை நிர்வாணமாக்கி தாக்கப்பட்டுள்ளார். மாண்டியாவில் ஹனுமன் கொடி ஏற்ற விடாமல் போலீசார் தடுக்கின்றனர்.

ஷிவமொகாவில் அரிவாள், கத்தியை காண்பித்து, பிளக்ஸ் பேனர்கள் பொறுத்தப்படுகின்றன. சைபர் குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இப்படி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சட்டம் – ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுள்ளதால், விவாதிப்பதற்கு வாய்ப்பு தர வேண்டும்.

பெலகாவி சுவர்ண விதான் சவுதாவில் நடந்த கூட்டத்தொடரிலும், சட்டம் – ஒழுங்கு பிரச்னை குறித்து விவாதிக்க கடிதம் கொடுக்கப்பட்டது. ஆனால், ஆளுங்கட்சி தரப்புக்கு மட்டுமே ஆதரவாக உள்ளீர்.

அமைச்சர் பரமேஸ்வர்: சபாநாயகர் வலது புறம் பார்ப்பதும் வேண்டாம்; இடது புறம் பார்ப்பதும் வேண்டாம், நேராக பார்க்கட்டும். எதிர்க்கட்சிகள் எழுப்பியுள்ள விஷயத்தை பேசுவதற்கு ஆட்சேபனை இல்லை.

அவர்கள் ஆட்சி காலத்தில், பெங்களூரில் எத்தனை கொலைகள் நடந்தன. மாநிலத்தில் அப்போது என்னென்ன சம்பவங்கள் நடந்தன என்பதை தெரிவிக்கிறேன்.

அதற்கு முன், விதிமுறைப்படி, கேள்வி நேரம் நடக்கட்டும். அதன் பின், சட்டம் – ஒழுங்கு பிரச்னை குறித்து விவாதிக்கலாம்.

இதை ஏற்று கொள்ளாத எதிர்க்கட்சியினர், சட்டம் – ஒழுங்கு பிரச்னை குறித்து முதலில் விவாதிக்க வேண்டும் என்றனர்.

அமைச்சர் பிரியங்க் கார்கே: சட்டம் – ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்துவதே நீங்கள் தான். அதை பற்றி விவாதிக்கலாம் என்று வலியுறுத்துவதும் நீங்களே.

மத்திய பிரதேசத்தில் கர்நாடக விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது பற்றியும் விவாதிக்க வேண்டும்.

தேசிய கொடியை இறக்கி, வேறு கொடியை ஏற்றியது குறித்தும் விவாதிக்க வேண்டும்.

பா.ஜ., – சுனில்குமார்: எந்த விஷயத்தை விவாதிக்க வேண்டும், எதை விவாதிக்க கூடாது என்பதை நீங்கள் அறிவுறுத்த வேண்டாம்.

இந்த வேளையில், பிரியங்க் கார்கே, சுனில் குமார் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அவரவர் சார்ந்த கட்சி ஆதரவாளர்கள் எழுந்து நின்று, மாறி, மாறி பேசியதால், கூச்சல், குழப்பம் நிலவியது. அமைச்சர் பரமேஸ்வர், பா.ஜ., உறுப்பினர் அரக ஞானேந்திரா ஆகியோரும் உரத்த குரலில் பேசி கொண்டனர்.

பா.ஜ., – அரக ஞானேந்திரா: இந்த அரசுக்கு கண், காது, இதயமே இல்லை.

எதிர்க்கட்சி தலைவர்: அமைச்சர் எங்களுக்கு புத்தி சொல்ல வர வேண்டாம். உங்கள் ‘இண்டியா’ கூட்டணிக்கு புத்தி சொல்லுங்கள்.

இந்த வேளையில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். யார், என்ன பேசுகின்றனர் என்பதே புரியவில்லை.

சபாநாயகர் காதர்: ம.ஜ.த.,வின் ரேவண்ணா, பாலகிருஷ்ணா ஆகியோர் கொப்பரை தேங்காய் குறித்து விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானம் கடிதம் கொடுத்துள்ளனர்.

விதிமுறைப்படி, முதலில் கடிதம் கொடுத்தவர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும். நீங்கள் சட்டம் – ஒழுங்கு பிரச்னை குறித்து புதிதாக கடிதம் கொடுங்கள், பரிசீலிக்கப்படும்.

பரமேஸ்வர்: சட்டம் – ஒழுங்கு பிரச்னை குறித்து, ஒத்திவைப்பு தீர்மானத்தின் கீழ் விவாதிக்க வாய்ப்பு உள்ளதா.இந்த பேச்சுக்கு, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுந்து நின்று ஆட்சேபனை தெரிவித்து பேசினர். பதிலுக்கு ஆளுங்கட்சி உறுப்பினர்களும் பேசியதால், கடும் அமளி ஏற்பட்டது.

சபாநாயகர்: சட்டம் – ஒழுங்கு பிரச்னை குறித்து பேசுவதற்கு வாய்ப்பு இல்லை.

இவ்வாறு விவாதம் நடந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.