SK21: "இது ஒரு பயோபிக்; மிலிட்டரி மேனாக மாற சிவா செய்தது இதுதான்!" – பிட்னஸ் டிரெய்னர் சந்தீப்

மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள். சிவாவின் பிறந்தநாள் முன்னோட்டமாக தற்போது அவர் நடித்து வரும் `எஸ்.கே.21′-க்கான அவரின் டிரான்ஸ்ஃபர்மேஷன் வீடியோ வைரலாகி வருகிறது.

கமலின் ராஜ்கமல் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வரும் படம், ‘எஸ்.கே.21’. இப்படத்தின் டைட்டில் அறிவிப்பும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் சிவாவின் பிறந்த நாளன்று வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. ‘மாவீரன்’ சிவாவாக இருந்தவர் இந்தப் படத்திற்காகக் கம்பீரமான மிலிட்டரி வீரராகிறார். இதற்காக சிவகார்த்திகேயன், ஜிம்மில் தவமிருந்து புது தோற்றத்திற்கு டிரான்ஃபர்மேஷன் ஆகி வந்திருக்கிறார். அவரது இந்த அசத்தல் லுக்கை செதுக்கிக் கொண்டு வந்த பெருமை அவரது ஃபிட்னஸ் டிரெய்னரான சந்தீப்பிற்கு உண்டு. திரைப் பிரபலங்களின் ஜிம் டிரெய்னர் சந்திப்பை சென்னை அடையாற்றில் உள்ள கோல்டு ஜிம்மில் சந்தித்தேன்.

ராஜ்குமார் பெரியசாமி மற்றும் சிவாவுடன் சந்தீப்

“சிவகார்த்திகேயன் சாரோட ‘எஸ்.கே.21’ல என்னோட பங்களிப்பும் இருக்கறது சந்தோஷமா இருக்கு. அவரை இதுவரை மத்த படங்கள்ல பார்த்தத் தோற்றத்தை விட, முற்றிலும் வித்தியாசமான ஒருத்தரா இந்தப் படத்துல பார்க்கப் போறீங்க. ஒரு மிலிட்டரி மேன் எப்படி இருப்பாரோ அப்படிக் கனகச்சிதமா அவரோட உடம்பைக் கொண்டு வந்திருக்கார். அப்படி ஒரு கடின உழைப்பை இந்தப் படத்துக்காகப் போட்டிருக்கார்.

சிவாவுடன் சந்தீப்

படத்தோட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி சார்னாலதான் இந்தப் படத்துக்குள் வந்தேன். சிம்புவோட டிரான்ஸ்ஃபர்மேஷன் வீடியோவைப் பார்த்துட்டு இந்தப் படத்துக்காக என்னைக் கூப்பிட்டதாகச் சொன்னாங்க. இயக்குநர் ராஜ்குமார் சார், என்கிட்ட இதுல சிவகார்த்திகேயனோட கதாபாத்திரம் எப்படிப்பட்டது, அதற்காக அவரது தோற்றம் எப்படி அமையணும், அவரோட உடல் அமைப்புல எந்த வகை மாற்றங்கள் பண்ண வேண்டியிருக்கும்… இப்படி அவரோட எதிர்பார்ப்புகளை சொன்னதும் ஆச்சரியமாகிடுச்சு! ‘எஸ்.கே.21’ ஒரு பயோபிக் படம். அவருக்கு மிலிட்டரி ரோல். ஆர்மியில உள்ள ஆள்… என்றதும் சவாலும், ஆர்வமும் எனக்கு இன்னும் அதிகமாகிடுச்சு.

ராஜ்குமார் சாரோட அலுவலகத்தில்தான் சிவாவைச் சந்திச்சேன். அவருக்கு எப்படிப்பட்ட வொர்க்கவுட்ஸ் தேவைப்படும்னு அவர்கிட்ட சொன்னேன். ராணுவ வீரர்கள் ரொம்பவே ஸ்டிராங்க் ஆக இருப்பாங்க. அவங்கள பாடிபில்டர்ஸ் கூட ஒப்பிட முடியாதுனாலும் மிலிட்டரி மேனைப் பார்த்த உடனேயே அவர் மிலிட்டரி பர்சன்தான்னு சொல்லிடமுடியும். ஏன்னா, அவரோட உடல்வாகு அப்படிக் கட்டுக்கோப்பா இருக்கும். அந்தத் தோற்றத்தைதான் சிவாவிடம் ராஜ்குமார் சார் எதிர்பார்த்தார். சிவா அந்த சமயம் ‘மாவீரன்’ படப்பிடிப்புல இருந்தார். 70லிருந்து 72 கிலோ எடையில் அவர் இருந்தபோது வொர்க் அவுட்ஸைத் தொடங்கினார். சென்னையில சில ஜிம்கள், ஹோட்டல்கள், சிவாவின் வீடுன்னு பல இடங்கள்ல வொர்க் அவுட்ஸ் பண்ணி அசத்தினார்.

தோனியுடன் சந்தீப்

நான் சிவாவைக் கவனிக்கும் போது ஒரு விஷயம் புரிஞ்சது. அவர் ரெகுலராக ஜிம் போகக்கூடியவர் இல்லைனு புரிஞ்சுக்கிட்டேன். முதல் ரெண்டு நாள்கள்லேயே ‘ஐய்யோ… அம்மா…’னு வலியோட கத்தினவர்… ‘பிரதர் நீங்க மான்ஸ்டர். உங்களை மாதிரி என்னையும் கொண்டு வரணும்னு நினைக்காதீங்க பிரதர். ஈஸியான வொர்க் அவுட்ஸை சொல்லுங்க’ன்னு ஜாலியா சொல்லுவார். சிவா படப்பிடிப்புக்காக மும்பை, காஷ்மீர், சென்னை, பாண்டிச்சேரினு ஒவ்வொரு இடமும் பறந்து, அங்கேயும் வொர்க் அவுட்ஸைத் தொடர்ந்தார். பக்காவான டயட் கடைபிடிக்க வேண்டியிருந்து

SK 21 படப்பிடிப்பில் சந்தீப்…

டயட்னால பிரியாணி, பன் பரோட்டா, மதுரை ஃபுட்ஸ்னு அவருக்குப் பிடிச்ச உணவுகளை எல்லாம் தியாகம் பண்ண வேண்டியிருந்தது. 90 நாள்கள்ல அவர் மாறணும்னா, டயட்டையும் அவர் சரியா கடை பிடிக்கணும். ஆனா, மீல்ஸ் சாப்பிடுறது உடல் எடை அதிகரிக்க உதவும்ங்கறதால, மதியம் சாப்பாட்டை மட்டும் சாப்பிடச் சொல்லிட்டேன். ஒமேகா 3, ஃபைபர், புரொட்டீன்ஸ்னு எல்லாமே எடுத்துக்கிட்டார். அவரோட டிசிப்பிளினாலதான் இவ்ளோ குறுகிய காலத்தில் அவரோட உடல் எடையை அதிகரிக்க முடிந்தது. படத்தோட இன்ட்ரோ காட்சியில் வித்தியாசமான சிவகார்த்திகேயனை பார்ப்பீங்க!” என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் ஃபிட்னஸ் டிரெயினர் சந்தீப்.

ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் சிம்புவின் `எஸ்.டி.ஆர்.48′ படத்திற்கும் இவர்தான் சிம்புவின் பர்சனல் டிரெயினர் என்பது கூடுதல் தகவல்! அவரின் முழுப்பேட்டியை இணைப்பில் காணலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.