நவி மும்பை மக்களுக்கு ஓர் ஆனந்தமான செய்தி. ‘நடமாடும் தெய்வம்’ என்று ஆன்மிக அன்பர்களால் அன்போடு அழைக்கப்பட்ட அற்புதர் ஜகத்குரு ஸ்ரீ மஹா பெரியவர். அவர் தன் வாழ்வில் நிகழ்த்திய அற்புதங்கள் குறித்துக் கேட்பதற்கு யாருக்குத்தான் ஆசை இருக்காது?
அந்த ஆசையைப் பூர்த்தி செய்யும் வகையில் வரும் மார்ச் 1-ம் தேதி, மராட்டிய சாகித்ய மந்திர் வாஷியில், மாலை 6 மணிக்கு, மஹா பெரியவர் பற்றிய பக்திச் சொற்பொழிவை இசைக்கவி ரமணன் ஆங்கிலத்தில் நிகழ்த்த இருக்கிறார்.

மகாபெரியவா, கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த அதிசயம். காந்தி முதல் காமராஜர்வரை அவரைச் சந்தித்து வியந்து போற்றி வணங்காத தலைவர்களே இல்லை. தேச எல்லை கடந்து பக்தர்களைத் தன்பால் ஈர்த்தவர். அவர் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம். தன்னை நாடிவந்த எளியவர்களின் வறுமையைப் போக்கினார். நோயோடுவந்தவர்களின் பிணி தீர்த்து நல்லாரோக்கியம் அருளினார். ‘மக்கள் சேவையே மகேசன் சேவை’ என்பதை உபதேசம் செய்து சகல மதத்தவரும் போற்றும் சத்குருவாக வாழ்ந்தார். இன்றும் அவர் சூட்சும ரூபமாக இருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அப்படிப்பட்ட மகான் குறித்து இசைக்கவி ரமணன் நிகழ்த்த இருக்கும் உரை மகாபெரியவா பக்தர்களிடையே ஓர் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது.
ஆன்மிகத்தில் ஆழ்ந்த புரிதல் கொண்ட இசைக்கவி ரமணன், தன் கலை இலக்கிய மற்றும் கர்நாடக இசைச் செயல்பாடுகள் மூலம் மக்களின் அன்பைப் பெற்றவர். அவர் பேச்சில் இசையும் கவியும் ஆன்மிகமும் நிறைந்திருக்கும். எனவே பார்வையாளர் அற்புதமான ஓர் ஆன்மிக உரையை அவரிடம் எதிர்பார்க்கலாம்.
இந்த நிகழ்வுக்கு அனுமதி இலவசம். மும்பை வாழ்பக்தர்கள் திரளாகக் கலந்துகொண்டு மகாபெரியவா குறித்த அருளுரையைக் கேட்டு ரசிக்கலாம். ஆன்மிக அன்பர்களுக்கும் இசைப்பிரியர்களுக்கும் இலக்கிய ஆர்வலர்களுக்கும் இந்த உரை நிச்சயம் சுவாரஸ்யமானதாகவும் மறக்கமுடியாததாகவும் அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.
நவி மும்பையில் வாழும் பக்த ஜனங்கள் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள ஆவலோடு காத்திருக்கிறார்கள். நீங்கள் மும்பையில் வாழ்பவராக இருந்தால் உங்கள் நாள்காட்டியில் இந்த நிகழ்வைத் தவறாமல் குறித்துக்கொள்ளுங்கள்.

மார்ச் 1 -ம் தேதி, நவி மும்பை மராத்தா சாகித்ய மந்திர் வாஷிக்கு வருகை தாருங்கள். உங்களை வரவேற்க அன்புடன் காத்திருக்கிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்கள் வருகையை [email protected] என்கிற இமெயிலுக்கு உறுதிப்படுத்தி முன்பதிவு செய்துகொள்ளுங்கள்.