‘தங்கல்’ படத்தில் நடித்த சுஹானி பட்னாகரின் மறைவிற்கு அமீர் கானின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த 2016 ஆம் ஆண்டு நிதிஷ் திவாரி இயக்கத்தில் அமீர்கானின் நடிப்பு மற்றும் தயாரிப்பில் வெளியான திரைப்படம் ‘தங்கல்’. மல்யுத்த வீராங்கனைகளின் உண்மை கதையை தழுவி எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. அப்படத்தில் மூத்த மகள் கீதா போகத் கதாபாத்திரத்தில் பாத்திமா சனா ஷேக் நடித்திருந்தார். இளையமகள் பபிதா போகத் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை சான்யா மல்கோத்ரா நடித்திருந்தார்.

அவரது இளம் வயது கதாபாத்திரத்தில்தான் குழந்தை நட்சத்திரமாக சுஹானி பட்னாகர் நடித்திருந்தார். இந்நிலையில் 19 வயதே ஆகும் சுஹானி பட்னாகர், டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். இந்த சம்பவம் பாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பலரும் சுஹானி பட்னாகருக்கு இரங்கல் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் அமீர் கானின் தயாரிப்பு நிறுவனம் சார்பிலும் இரங்கல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் வெளியிட்டிருக்கும் இரங்கல் பதிவில், “சுஹானி காலமானதைக் கேட்டு நாங்கள் மிகவும் வருத்தப்பட்டோம். அவரது தாயார் பூஜாஜிக்கும், குடும்பத்தினர் அனைவருக்கும் எங்களது ஆழ்ந்த அனுதாபங்கள்.

திறமையான சுஹானி இல்லாமல் இருந்திருந்தால் ‘தங்கல்’படம் முழுமை அடைந்திருக்காது. சுஹானி, நீங்கள் எப்போதும் எங்கள் இதயங்களில் ஒரு நட்சத்திரமாக இருப்பீர்கள்” என்று இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.