ஸ்ரீ நாராயண குரு சுவாமியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆச்சிரமமொன்றை நிர்மாணிப்பதற்காக காணித்துண்டொன்றை நீண்டகால குத்தகை அடிப்படையில் ஸ்ரீ நாராயண தர்ம சங்கத்தின் கொழும்பு நம்பிக்கைப் பொறுப்புக்கு வழங்குவதற்காக சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்று அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி; பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (20) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பான அமைச்சரவைத் தீர்மானம் வருமாறு…
ஸ்ரீ நாராயண குரு சுவாமியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆச்சிரமமொன்றை நிர்மாணிப்பதற்காக காணித்துண்டொன்றை நீண்டகால குத்தகை அடிப்படையில் வழங்கல்
ஸ்ரீ நாராயண குரு சுவாமியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்தியாவின் நிதியுதவியுடன் ஆச்சிரமமொன்றை நிர்மாணிப்பதற்காக நுவரெலியா மாவட்டத்தில் காணித்துண்டொன்றை வழங்குமாறு ஸ்ரீ நாராயண தர்ம சங்கத்தின் கொழும்பு நம்பிக்கைப் பொறுப்பு கோரிக்கை சமர்ப்பித்துள்ளது. அதற்கமைய, நுவரெலியா மாவட்டத்தில் கொத்மலை பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்குச் சொந்தமான ரம்பொடவத்த எனும் பெயரிலான காணியின் 06 ஏக்கர் 02 றூட் அளவிலான காணித்துண்டு அடையாளங் காணப்பட்டுள்ளது. குறித்த காணித்துண்டை 30 வருடங்கள் நீண்டகால குத்தகையின் அடிப்படையில் ஸ்ரீ நாராயண தர்ம சங்கத்தின் கொழும்பு நம்பிக்கைப் பொறுப்புக்கு வழங்குவதற்காக சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.