‛சினேகம்' அறக்கட்டளை பெயரில் மோசடி: நடிகை ஜெயலட்சுமி கைது

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகியான சினிமா பாடலாசிரியர் சினேகன், சென்னை விருகம்பாக்கம் வெங்கடேஷ் நகா் பகுதியில் வசித்து வருகிறார். இவர் ‛சினேகம்' என்ற அறக்கட்டளையை நடத்தி வருகிறார். அதே பெயரில் சமூக ஊடகங்களில் போலி கணக்குகளை துவக்கி பணம் வசூலித்து வருவதாக, நடிகையும் பா.ஜ., நிர்வாகியுமான ஜெயலட்சுமி மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் சினேகன் புகார் அளித்தார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த நடிகை ஜெயலட்சுமி, தன் மீது அவதூறு பரப்பும் சினேகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனது தரப்பில் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இருவரையும் தனித்தனியாக அழைத்து விசாரித்தனர். இதனைத்தொடர்ந்து சினேகன் மீது வழக்குப்பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிடக் கோரி எழும்பூர் நீதிமன்றத்திலும் நடிகை ஜெயலட்சுமி மனுத் தாக்கல் செய்தார். அதேபோல் சினேகனும், ஜெயலட்சுமி மீது வழக்குப் பதிய கோரி மனு தாக்கல் செய்தார்.

இதனை விசாரித்த நீதிமன்றம், பாடலாசிரியர் சினேகன் மற்றும் நடிகை ஜெயலட்சுமி மீது வழக்குப் பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டது. இதன்படி, இருவர் மீதும் சென்னை திருமங்கலம் போலீசார் ஏற்கெனவே வழக்குப்பதிவு செய்தனர். அதன்படி, இன்று விசாரணைக்கு வந்திருந்த ஜெயலட்சுமியை திருமங்கலம் போலீசார் கைது செய்தனர். தன் மீதான குற்றசாட்டுக்கு அனைத்து ஆதாரங்களையும் கொடுத்தும் கைது செய்துள்ளதாக போலீசார் மீது ஜெயலட்சுமி குற்றம் சாட்டினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.