‘ரெய்டு’க்குப் பின் பாஜகவுக்கு ‘நன்கொடை’ அளித்த நிறுவனங்கள்: விசாரணை கோரும் காங்கிரஸ்

புதுடெல்லி: பாஜக கட்சிக்கு மத்திய புலனாய்வு அமைப்புகளின் சோதனைக்குள்ளான கார்ப்பரேட் நிறுவனங்கள் வழங்கிய அரசியல் நன்கொடைகள் குறித்து விரிவாக விசாரணை நடத்த வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் (அமைப்பு) கே.சி.வேணுகோபால் கடிதம் எழுதியுள்ளார்.

அமலாக்கத் துறை, வருமானவரித் துறை மற்றும் மத்திய புலனாய்வு முகமை (சிபிஐ) போன்ற மத்திய அமைப்புகளின் சோதனைகளுக்கு உள்ளான நிறுவனங்கள் சோதனை நடந்த சில மணி நேரங்களில் பாஜகவுக்கு நன்கொடை வழங்கிய முறை பற்றி வெளியான தகவலைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சி இந்தக் கடிதத்தை எழுதியுள்ளது.

மத்திய நிதியமைச்சருக்கு கே.சி.வேணுகோபால் எழுதியுள்ள அக்கடிதத்தில், “செய்தி அறிக்கை ஒன்றின்படி, கடந்த 2018-19 மற்றும் 2022-23 நிதியாண்டுகளில் சுமார் 30 நிறுவனங்கள் கிட்டத்தட்ட ரூ.335 கோடியை பாஜகவுக்கு நன்கொடையாக அளித்துள்ளன. இதில் 23 நிறுவனங்கள், புலனாய்வு அமைப்புகளின் சோதனைகளுக்கு முன்பு பாஜகவுக்கு நன்கொடை வழங்கியது இல்லை. புலனாய்வு அமைப்புகளின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து பல நிறுவனங்கள் பாஜகவுக்கு வழங்கும் நன்கொடையை அதிகரித்துள்ளன என்று கூறப்பட்டுள்ளது.

மேற்கூறிய நிகழ்வு புலனாய்வு அமைப்புகளின் மீது அழுத்தம் கொடுத்து, நன்கொடை என்ற வடிவத்தில் மிரட்டி பணம் பறிக்கும் ஆளுங்கட்சி செயலுக்கு மிகத் தெளிவான நிகழ்வுகளாகும் இது. நிச்சயமாக இவை மட்டும் மிரட்டி பணம் பறிக்கும் செயல் நடந்திருப்பதற்கான நிகழ்வுகள் மட்டுமே இல்லை.

பதிவு செய்யப்பட்ட வழக்குகள் மற்றும் விசாரணை அமைப்புகளால் எடுக்கப்பட்ட நவடிக்கைகள் தவறானது என்று நாங்கள் குற்றம்சாட்டவில்லை. ஆனால் அமலாக்கத் துறையின் விசாரணை வழக்குகள் இருக்கும் நிறுவனங்கள் ஏன் ஆளுங்கட்சியான பாஜகவுக்கு நன்கொடை வழங்க வேண்டும். அமலாக்கத் துறையின் விசாரணைக்குப் பின்னர் அந்த நிறுவனங்கள் பாஜகவுக்கு நன்கொடை வழங்கியது தற்செயல் நிகழ்வு மட்டும்தானா?

உங்களிடம் மறைப்பதற்கு எதுவும் இல்லையென்றால், பாஜகவின் கஜானா நிரம்புவதற்கு காரணமான காலவரிசை நிகழ்வுகள் ஒவ்வொன்றுக்கும் மறுப்பு அளிக்கத் தயாரா? உண்மையை விளக்க நீங்கள் தயாராக இல்லை என்றால், பாஜகவுக்காக நன்கொடையாக கொள்ளையடித்த இந்த சந்தேகத்துக்குரிய நிகழ்வுகள் குறித்து உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் உங்களை நீங்களே விசாரணைக்கு உட்படுத்திக்கொள்ள தயாரா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், மத்திய புலனாய்வு அமைப்புகள், குறிப்பாக மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் உள்ள அமைப்புகளின் தன்னாட்சி மற்றும் செயல்முறை பற்றி கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன் மத்திய புலனாய்வு அமைப்புகளை வற்புறுத்தி கார்ப்பரேட் நிறுவனங்களிடம் பெற்ற நன்கொடை உள்பட பாஜகவின் நிதிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

தேர்தல் பத்திரம் விவகாரம்: தேர்தல் பத்திரம் சட்டவிரோதமானது என்றும், வங்கிகள் அவற்றை விற்பனை செய்ய தடை விதிப்பதாகவும் உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. தனியார் நிறுவனம் ஒன்று திரட்டிய தரவின்படி, தேர்தல் பத்திரம் மூலமாக அதிக நிதி பெற்ற கட்சியாக பாஜக உள்ளது. 2018–2023 காலகட்டத்தில் பாஜக ரூ.6,564 கோடியைத் தேர்தல் பத்திரம் மூலம் நிதியாகப் பெற்றிருக்கிறது. பாஜகவைத் தொடர்ந்து ரூ.1,123 கோடியுடன் காங்கிரஸ் இரண்டாம் இடத்தில் உள்ளது. ஆனால், இரண்டு கட்சிகளும் பெற்ற நிதியில் பெருமளவிலான வேறுபாடு உள்ளது கவனிக்கத்தக்கது.

தேர்தல் பத்திரம் திட்டத்தால்அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் நிதிகள் நெறிப்படுத்தப்படும் என்று சொல்லித்தான் இந்தத் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. எனினும், இத்திட்டத்தின்படி நிதி வழங்குபவர்கள் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படுவதால், கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்கும்; அதன் மூலம் அரசிடமிருந்து அந்நிறுவனங்கள் ஆதாயம் பெறும் வாய்ப்பு உருவாகும் என்கிற விமர்சனங்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து, இத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனத் தொண்டு நிறுவனங்கள், எதிர்க்கட்சிகள் தீவிரமாக வலியுறுத்தி வந்தன என்பது நினைவுகூரத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.