Doctor Vikatan: கீரை சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு… காரணங்களும் தீர்வுகளும் என்ன?

Doctor Vikatan: என் வயது 54. கீரை வகைகளை விரும்பிச் சாப்பிடுவேன். ஆனால் கடந்த ஆறு மாதங்களாக முருங்கைக்கீரை சாப்பிட்டால் மறுநாள் பேதியாகிறது. கடந்த இரண்டு மாதங்களாக எந்தக் கீரையைச் சாப்பிட்டாலும் அதன் கடைசி துணுக்கு வயிற்றில் இருக்கும் வரை பேதியாகிறது. காரணம் என்ன… தீர்வு உண்டா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த யோகா மற்றும் இயற்கை மருத்துவர் யோ. தீபா

இயற்கை மருத்துவர் யோ. தீபா

இந்தப் பிரச்னைக்கு ‘போஸ்ட்ப்ராண்டையல் டயரியா’ (Postprandial diarrhea) என்று பெயர். சாப்பிட்ட உடன், அந்தச் சத்துகள் உடலில் தங்காமல் உடனே வெளியேறிவிடும். இதனால், வயிற்றுவலி, வாயு பிரிதல் போன்ற பிரச்னைகள் வரலாம்.

வயிற்றுப்பகுதியில் உள்ள தொற்று, அதிக ஆன்டிபயாடிக் எடுப்பது, மன அழுத்தம் போன்ற பல விஷயங்கள் இதற்கு காரணமாகலாம். வாய் முதல் ஆசனவாய் வரையிலான பகுதியில் ஏதேனும் பிரச்னை இருக்கலாம். ‘இரிடபுள் பவல் சிண்ட்ரோம் ‘ (Irritable Bowel Syndrome ) என்று ஒரு பிரச்னை உண்டு. குறிப்பிட்ட உணவுகளைச் சாப்பிடும்போது மேற்குறிப்பிட்ட அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடிய பிரச்னை இது. குறிப்பிட்ட உணவுகளை ஏற்றுக்கொள்ளாமல் குடல் வெளியேற்றிவிடும். இரிடபுள் பவல் சிண்ட்ரோம் பிரச்னை உள்ளவர்களுக்கு சில நாள்கள் மலச்சிக்கல் இருக்கும், சில நாள்கள் வயிற்றுப்போக்கு இருக்கும். வயிற்றை இழுத்துப்பிடித்தது போல இருக்கும். வலி இருக்கும். 

முருங்கைக்கீரை என்றில்லை, எல்லா கீரைகளிலும் ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. நார்ச்சத்து, அனைத்து வைட்டமின்கள், இரும்புச்சத்து என சத்துகள் அதிகம். அதற்காக அளவுக்கதிகமாகவும் எடுக்கக்கூடாது. நார்ச்சத்து அதிகமுள்ள உணவு என்பதால் அளவு கடந்து உண்ணும்போது வயிற்றுப்போக்கு ஏற்படும்.  உணவு சகிப்புத்தன்மை (Food intolerance ) எனப்படும் பிரச்னை இருக்கும்போது நாம் உண்ணும் உணவு ஒவ்வாமையை ஏற்படுத்தி, உணவை வெளியேற்றிவிடும்.

நெஞ்செரிச்சல் வரலாம்…

கீரைகள் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கும். கல்லீரல் ஆரோக்கியமாகும். சருமமும் கூந்தலும் ஆரோக்கியமாகும். கண் பார்வைக்கு நல்லது. ஆனால், உணவு சகிப்புத்தன்மை இருப்பவர்களுக்கு இந்த உணவுகள் ஏற்றுக்கொள்ளாமல் பிரச்னைகளை ஏற்படுத்தலாம். முருங்கைக்கீரைக்கு மலச்சிக்கலை குணப்படுத்தும் தன்மை உண்டு. அதையே அளவுக்கதிகமாக எடுக்கும்போது வயிற்றுப்போக்கு, நெஞ்செரிச்சல் போன்றவை வரலாம். வயிற்று உப்புசம் வரலாம். எதுக்களிக்கும் பிரச்னை ஏற்படலாம்.

சிலருக்கு ரத்தம் தொடர்பான பிரச்னைகள் இருக்கலாம். பற்களில் ரத்தக் கசிவு இருக்கலாம். சின்ன காயம் பட்டாலும் ரத்தம் வந்துகொண்டே இருக்கும். தட்டணுக்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கும். இந்தப் பிரச்னைகளுக்காக மருந்துகள் எடுக்கும்போது, கூடவே முருங்கைக்கீரையும் சேர்த்து எடுப்பதால் பிரச்னைகள் வரலாம். நமது மூளைக்கும், குடலுக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதாக பல ஆய்வுகள் சொல்கின்றன. அதனால் அதைத் தூண்டும்வகையில் அக்குபஞ்சர் சிகிச்சை மேற்கொள்வதன் மூலமும் இரிடபுள் பவல் சிண்ட்ரோம் பிரச்னையிலிருந்து விடுபடலாம். மன அழுத்தம் நீங்க யோகா, தியானம் போன்றவற்றை மேற்கொள்ளலாம். யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தில் இந்தப் பிரச்னையை குணப்படுத்த அருமையான சிகிச்சைகள் உள்ளன. 

யோகா, தியானம் செய்யலாம்…

எனிமா என்ற சிகிச்சையின் மூலம் குடலை சுத்தப்படுத்த வேண்டியிருக்கும். ஏற்கெனவே வயிற்றுப்போக்கு இருக்கும்போது, எனிமா சிகிச்சை தேவையா என்ற கேள்வி எழலாம். இந்தப் பிரச்னையை டீடாக்ஸிஃபிகேஷன் சிகிச்சையிலிருந்துதான் தொடங்க வேண்டும். பிரச்னையின் தீவிரத்துக்கேற்ப மண் சிகிச்சை, நீராவிக் குளியல் போன்ற வேறு சிகிச்சைகளும் பரிந்துரைக்கப்படும். நோய்க்கான காரணத்தை சரிசெய்வதுதான் இதில் அடிப்படை. அரசு யோகா, இயற்கை மருத்துவர்களை அணுகினால் சரியான ஆலோசனைகளை வழங்கி வழிநடத்துவார்கள்.

நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இளநீர், நீர்மோர் எடுத்துக்கொள்ளலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.