கடந்த மூன்று வருடங்களாக இந்தியாவிலிருந்து வெளிநாட்டிற்கு ரூ.2000 கோடி மதிப்புள்ள போதைப் பொருளை கடத்திய தமிழ் திரைப்படத் தயாரிப்பாளரை மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு தேடி வருகிறது.
டெல்லியில் கடந்த சில நாட்களாக போதைப்பொருள் கும்பல்களை கைது செய்யும் நடவடிக்கையும் அது தொடர்பான சோதனைகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் தெற்கு டெல்லியில் இரண்டு போதைப் பொருள் குடோனை சோதனை நடத்தியதில் சுமார் 1700 கிலோ போதைப் பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதன் தொடர்ச்சியாக டெல்லியில் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் டெல்லி காவல்துறை இணைந்து 50 கிலோ போதைப் பொருளை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு கடத்த முயன்ற மூன்று பேரை அதிரடியாக கைது செய்தனர். தேங்காய் பொடி மற்றும் ஊட்டச்சத்து பவுடருடன் போதை பொருளை கடத்த முயன்றது அம்பலமானது.
2000 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த போதைப் பொருள் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது யார் என பிடிபட்ட தமிழகத்தைச் சேர்ந்த மூன்று நபர்களிடம் விசாரணை நடத்தியதில், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவர் கும்பல் தலைவனாகவும் இந்த கடத்தலுக்கு மூளையாகவும் செயல்பட்டது தெரிய வந்தது. இதனையடுத்து போதை பொருள் தடுப்பு பிரிவு தலைமையக அதிகாரிகள் சென்னை மண்டல அதிகாரிகளோடு சேர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் என்பவரே கடந்த மூன்று ஆண்டுகளாக போதைப்பொருள் கடத்தல் தலைவனாக செயல்பட்டது தெரியவந்துள்ளது. இவர் திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் பதவியில் செயல்பட்டு வந்துள்ளார். தனது சகோதரர்கள் மைதீன் மற்றும் சலீம் ஆகியோருடன் இணைந்து இந்த போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டது விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
இந்நிலையில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் அ.ஜாபர் சாதிக்கை நிரந்தரமாக நீக்கி திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்தே, தமிழகத்தில் போதைப் பொருள்கள் நடமாட்டம் அதிகம் இருப்பதையும், பள்ளி மாணவர்கள் வரை, போதைப் பொருள்களின் தாக்கம் பரவியிருப்பதையும், தமிழகத்தில் போதைப் பொருள்கள் பரவலாகக் கிடைத்து வருவதாக ஊடகங்களில் வரும் செய்திகளையும், பா.ஜ.க., சார்பாக எடுத்துக் கூறி, கடுமையான நடவடிக்கைகள் எடுக்குமாறு திமுக அரசைப் பல முறை வலியுறுத்தியும், இதுவரை உறுதியான நடவடிக்கைகள் எதுவும் எடுத்ததாகத் தெரியவில்லை. தற்போது, திமுகவில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் ஒருவரே, இத்தனை ஆண்டுகளாகச் சென்னையிலிருந்து கொண்டு போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்திருப்பது, பலத்த சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது.
இந்தச் சந்தேகங்கள் மேலும் வலுப்படுவதைத் தவிர்க்கவும், போதைப் பொருள்கள் புழக்கம், நமது நாட்டின் மீது தொடுக்கப்படும் போர் என்பதை மனதில் கொண்டும், உடனடியாக தமிழக அரசு போதைப் பொருள்கள் கடத்தலில் தொடர்புடைய அனைவரையும் கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளேன்’ என்று கூறியுள்ளார்.