பா.ஜ.க ஆட்சி நடைபெறாத மாநிலங்களை வரிப் பகிர்ப்பு, மத்திய அரசின் நலத்திட்டங்கள் உள்ளிட்ட விஷயங்களில் மத்திய பா.ஜ.க அரசு புறக்கணிப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாகக் குற்றம்சாட்டிவருகின்றன. குறிப்பாக, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டுவரப்படும் என்று கூறிய பா.ஜ.க-வை, எங்கே எய்ம்ஸ் எனத் தொடர்ச்சியாக, தமிழ்நாடு அரசு கேள்வியெழுப்பிக்கொண்டே இருக்கிறது.

இந்த நிலையில், குஜராத்தின் ராஜ்கோட், பஞ்சாப்பின் பதிண்டா, உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி, மேற்கு வங்கத்தின் கல்யாணி, ஆந்திராவின் மங்களகிரி ஆகிய பகுதிகளில் கட்டிமுடிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகளை நேற்று திறந்துவைத்த பிரதமர் மோடி, கடந்த 10 ஆண்டுகளில் 10 எய்ம்ஸ் மருத்துவமனைகள் கொண்டுவர தனது அரசு ஒப்புதல் வழங்கியிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். குஜராத்தில் நேற்று நடைபெற்ற 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ரூ.11,500 கோடி செலவில் 200-க்கும் மேற்பட்ட சுகாதார உள்கட்டமைப்பு திட்டங்கள் உட்பட ரூ.48,000 கோடி செலவில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மோடி தொடங்கிவைத்தார்.
அதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய மோடி, “பிறரின் நம்பிக்கை முடியும் இடத்திலிருந்து மோடியின் உத்தரவாதம் தொடங்குகிறது. சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டில் 50 ஆண்டுகளாக, நாட்டில் ஒரே ஒரு எய்ம்ஸ் மட்டுமே இருந்தது. அதுவும்கூட டெல்லியில் இருந்தது. மேலும், சுதந்திரத்திற்குப் பிறகு கடந்த ஏழு தசாப்தங்களாக ஏழு எய்ம்ஸ்-களுக்கு மட்டுமே ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதுவும்கூட ஒருபோதும் முடிக்கப்படவில்லை.

ஆனால், தற்போது பத்தே நாள்களில் ஏழு எய்ம்ஸ் மருத்துவமனைகள் திறக்கப்பட்டிருக்கிறது மற்றும் அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது. அதனால்தான், கடந்த ஆறேழு தசாப்தங்களாக நடந்ததைவிட பல மடங்கு வேகமாக நாட்டை முன்னேற்றி வருகிறோம் என்று கூறுகிறேன்.
Today is an important day for the health sector. India gets 5 new AIIMS.
While in Rajkot, I went to the AIIMS Rajkot campus. These institutions will strengthen healthcare infrastructure in different parts of India. pic.twitter.com/5SnOzkeJN5
— Narendra Modi (@narendramodi) February 25, 2024
கடந்த காலங்களில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மத்திய அரசிடமிருந்து எய்ம்ஸ் மருத்துவமனைகளை எதிர்பார்த்துச் சோர்வடைந்தனர். ஆனால், இன்று நவீன மருத்துவமனைகள் மற்றும் எய்ம்ஸ் போன்ற மருத்துவ வசதிகள் ஒன்றன் பின் ஒன்றாக திறக்கப்படுகின்றன. கடந்த 10 ஆண்டுகளில் 10 எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்குத் தனது அரசு ஒப்புதல் அளித்துள்ளது” என்று பெருமிதம் கொண்டார்.

முன்னதாக, கம்யூனிஸ்ட் எம்.பி சு.வெங்கடேசன், “அடுத்த ஆறு நாள்களில் 6 எய்ம்ஸ் மருத்துவமனைகளைத் திறந்து வைக்கிறார் பிரதமர். ஒரே அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்ட அனைத்து எய்ம்ஸ்களும் திறக்கப்பட்டுவிட்டன, மதுரையைத் தவிர. தமிழ்நாட்டுக்கு நீங்கள் தருவது தப்புத் தப்பாய் உச்சரிக்கும் திருக்குறள் மட்டும்தானா?” என்று ஒரு வாரத்துக்கு முன்பு X சமூக வலைதளத்தில் விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.