குஜராத் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அர்ஜுன் மோத்வாடியா காங்கிரஸில் இருந்து விலகல்

காந்திநகர்: குஜராத் காங்கிரஸின் முன்னாள் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான அர்ஜுன் மோத்வாடியா தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியையும், கட்சிப் பதவியையும் ராஜினாமா செய்துள்ளார்.

குஜராத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்த அர்ஜுன் மோத்வாடியா, அம்மாநில காங்கிரஸ் தலைவராகவும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தவர். தற்போது அவர் போர்பந்தர் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் அவர் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவி, கட்சிப் பதவி ஆகியவற்றை ராஜினாமா செய்துள்ளார்.

இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “அயோத்தி ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை விழாவில் பங்கேற்பது இல்லை என்ற முடிவை காங்கிரஸ் கட்சி எடுத்தபோது நான் எனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தேன். அதை தாங்கள் அறிவீர்கள். ராமர் இந்துக்களின் வழிபடும் கடவுள் மட்டுமல்ல; அவர் நமது நாட்டின் ஆன்மாவாக இருக்கிறார். பிராண பிரதிஷ்டை விழாவில் பங்கேற்பது இல்லை என்ற முடிவின் மூலம் காங்கிரஸ் கட்சி இந்திய மக்களின் உணர்வுகளை காயப்படுத்தியது.

அதோடு, மக்களின் உணர்வுகளை கணிப்பதில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்துவிட்டது. அயோத்தி ராம ஜென்ம பூமி பிராண பிரதிஷ்டை விழாவில் பங்கேற்காததன் மூலம் காங்கிரஸ் மிகப் பெரிய தவறிழைத்துவிட்டது என நான் சந்தித்த பலரும் குற்றம் சாட்டினார்கள். பிராண பிரதிஷ்டை நடந்த சமயத்தில், அசாமில் ராகுல் காந்தி போராட்டத்தில் ஈடுபட்டது மக்களை மேலும் காயப்படுத்துவதாக இருந்தது.

கடந்த ஓராண்டுக்கும் மேலாக, எனது மாவட்டத்துக்கும் மாநிலத்துக்கும் உதவ முடியாத நிலையில் நான் இருப்பதை உணர்ந்தேன். எனவே, கனத்த இதயத்துடன் கட்சியின் அனைத்துப் பொறுப்புகளையும் நான் ராஜினாமா செய்கிறேன். காங்கிரசில் கடந்த 40 ஆண்டுகளாக இருந்திருக்கிறேன். எனது முழு வாழ்க்கையையும் கட்சிக்காக அர்ப்பணித்திருக்கிறேன். இந்த 40 ஆண்டுகளில் என் மீது அன்பு காட்டிய கட்சியின் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜுன் மோத்வாடியா, “ஒரு கட்சி மக்களுடனான தனது தொடர்பை இழந்துவிட்டால், அதனால் நீண்ட காலத்திற்கு நீடித்திருக்க முடியாது. நாட்டு மக்கள் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என விரும்பினார்கள். உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கோயில் கட்ட அனுமதி அளித்த பிறகு அதனை ஆதரிக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்திருந்தது. ஆனால், பிராண பிரதிஷ்டை விழா அழைப்பையே அது நிராகரித்துவிட்டது.

அப்போதே நான் எனது அதிருப்தியை வெளிப்படுத்தினேன். மக்களின் உணர்வை இது காயப்படுத்தும் என்றும், அரசியல் ரீதியாக இதுபோன்ற ஒரு முடிவை நாம் எடுக்கக்கூடாது என்றும், அவ்வாறு எடுத்தால் அது மக்களுடனான தொடர்பில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறினேன். வேறு சில விஷயங்கள் தொடர்பாகவும் நான் எனது கருத்துக்களை பல வழிகளில் தெரிவித்தேன். ஆனால், அதில் எனக்கு வெற்றி கிடைக்கவில்லை. எனவே, இறுதியாக நான் எனது பதவியை ராஜினாமா செய்வது என முடிவு செய்தேன்” என தெரிவித்துள்ளார்.

குஜராத் காங்கிரஸ் செயல் தலைவர் அம்பரிஷ் தெர் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், அர்ஜுன் மோத்வாடியாவும் ராஜினமா செய்திருப்பது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என கருதப்படுகிறது. இருவருமே பாஜகவில் இணைய திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.