புதுடில்லி : லோக்சபா தேர்தல் விரைவில் நடக்க உள்ள நிலையில், அனைத்து அமைச்சர்களுடனும், பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாள் முழுதும் ஆலோசனை நடத்தினார். வளர்ந்த இந்தியாவுக்கான திட்டங்கள், அடுத்த ஐந்து ஆண்டுகளில் மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்து இதில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
லோக்சபாவுக்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ளது. இந்த ஆட்சிக்காலம் முடிவுக்கு வரவுள்ள நிலையில், அனைத்து அமைச்சர்களுடனும், பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார்.
‘விக் ஷித் பாரத்’ எனப்படும் வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதற்கான தெளிவான வழிமுறைகளை உருவாக்குவது தொடர்பாக, இந்தக் கூட்டத்தில் முக்கியமாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
வளர்ந்த நாடாக்குவதற்கு மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள், நடைமுறைகள் தொடர்பாக, பல்வேறு தரப்பினருடன் ஏற்கனவே ஆலோசனை நடத்தப்பட்டது. இது தொடர்பாக, 2,700 கூட்டங்கள், கலந்துரையாடல்கள், கருத்தரங்குகள் நடத்தப்பட்டது. மேலும், நாடு முழுதும் இருந்து, 20 லட்சம் இளைஞர்கள், தங்களுடைய ஆலோசனைகளையும் வழங்கியுள்ளனர்.
இவற்றின் அடிப்படையில், வளர்ந்த நாடாக்குவதற்கு மேற்கொள்ள வேண்டிய பணிகளை வடிவமைக்கும் வகையில், அமைச்சர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
மேலும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள், மீண்டும் ஆட்சி அமைத்ததும், முதல், 100 நாட்களில் நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement