இந்தோனேசியாவின் பாலி தீவில் முதல் இந்து அரசு பல்கலைக்கழகம்: அதிபர் ஜோகோவி விடோடோ ஒப்புதல்

ஜகார்த்தா: இந்தோனேசியாவின் பாலி தீவில் செயல்பட்டு வரும் இந்து தர்ம அரசு கல்வி நிறுவனத்தை பல்கலைக்கழக அந்தஸ்துக்கு உயர்த்தி அதிபர் ஜோகோவி விடோடோ ஆணையிட்டுள்ளார்.

இந்தோனேசியாவில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கின்றனர். எனினும், அதன் கட்டுப்பாட்டில் உள்ள பாலி தீவில் பெரும்பான்மையாக இந்துக்கள் வாழ்கின்றனர். உலகளவில் சுற்றுலாமையமாக விளங்கும் இந்த பாலித்தீவில் கடந்த 1993-ம் ஆண்டு இந்து மத ஆசிரியர்களால் கல்வி நிறுவனம் தொடங்கப்பட்டது. அதன்பின்னர் கடந்த 1999-ம்ஆண்டு இந்து மத அரசு கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டது. பாலி தீவின் தலைநகர் டென்பசாரில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வந்தஇந்தக் கல்லூரி கடந்த 2004-ம்ஆண்டு இந்து தர்ம அரசு நிறுவனமாக (ஐஎச்டிஎன்) மீண்டும் தரம் உயர்த்தப்பட்டது.

இந்நிலையில், இந்நிறுவனத்துக்கு பல்கலைக்கழக அந்தஸ்துவழங்கும் ஆணையில் அதிபர்ஜோகோவி விடோடோ கையெழுத்திட்டுள்ளார். அதன்படி, இந்தோனேசியாவின் முதல் இந்துப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டுள்ளது. அதிபரின் ஒழுங்குமுறைஅதிகாரத்தின் கீழ் இந்தப் பல்கலை. உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய இந்து பல்கலைக் கழகத்துக்கு ‘ஐ கஸ்தி பகஸ் சுக்ரிவா ஸ்டேட் இந்து யுனிவர்சிட்டி (யுஎச்என்)’ என்று பெயர்சூட்டப்பட்டுள்ளது. இந்தப் பல்கலைக்கழகம் இந்து உயர் கல்விக்கான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கி செயல்படும்.

இதன் மூலம் ஐஎச்டிஎன் நிறுவனத்தில் படிக்கும் மாணவர்கள் உடனடியாக யுஎச்என் மாணவர்களாக மாற்றப்படுவார்கள். ஐஎச்டிஎன் நிறுவனத்தின் சொத்துகள், ஊழியர்கள் உட்பட அனைத்தும் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் என்று அதிபரின் ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.