சட்டவிரோத மணல் கடத்தல் – லாலு பிரசாத்தின் நெருங்கிய நண்பர் கைது

பிஹார்: சட்டவிரோத மணல் கடத்தல் வழக்கில் பிஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் நெருங்கிய நண்பர் சுபாஷ் யாதவை, அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.

சட்டவிரோத மணல் கடத்தல் மற்றும் பண மோசடி புகாரில் லாலு பிரசாத் யாதவின் நெருங்கிய நண்பரும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் சார்பில் தேர்தலில் போட்டியிட்டவருமான சுபாஷ் யாதவ்-க்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சுபாஷ் யாதவ் மற்றம் அவரது நெருங்கிய நண்பர்களுக்குச் சொந்தமான 6 இடங்களில் அமலாக்கத்துறை நேற்று சோதனை நடத்தியது. இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ. 2.30 கோடி பணம் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியது.

அதோடு, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் சுபாஷ் யாதவை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று நள்ளிரவு கைது செய்தனர். பாட்னாவில் உள்ள சிறப்பு பணமோசடி தடுப்புச் சட்டம் (PMLA) நீதிமன்றத்தில் அவர் நாளை (மார்ச் 11 ஆம் தேதி) ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிராட்சன்ஸ் கமாடிட்டிஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்துக்கு எதிராக பிஹார் காவல்துறை 20 முதல் தகவல் அறிக்கைகளை பதிவு செய்துள்ளது. இந்நிறுவனத்தின் இயக்குநர்கள், இ-சலான்களைப் பயன்படுத்தாமல் சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் விற்பனையில் ஈடுபட்டதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் பிஹார் எம்எல்சியும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவருமான ராதா சரண் சா, அவரது மகன் கன்ஹையா பிரசாத் மற்றும் பிராட்சன்ஸ் கமாடிட்டிஸ் இயக்குநர்கள் மிதிலேஷ் குமார் சிங், பாபன் சிங் மற்றும் சுரேந்திர குமார் ஜிண்டால் ஆகியோரை அமலாக்கத்துறை கடந்த ஆண்டு கைது செய்து சிறையில் அடைத்தது. பாட்னா சிறப்பு PMLA நீதிமன்றத்தில் அவர்களுக்கு எதிராக நவம்பர் 2023 இல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. சட்டவிரோத மணல் கடத்தல் மூலம் ரூ. 161 கோடி அளவுக்கு பணம் ஈட்டப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.