மக்களவைத் தேர்தலையொட்டி 3 தொகுதிகள் கேட்ட நிலையில் 2 தொகுதிகள் விசிகவுக்கு ஒதுக்கப்பட்டன. இதையொட்டி, திமுகவையோ, கூட்டணி கட்சியையோ விமர்சிக்கக் கூடாது என நிர்வாகிகளுக்கு விசிக தலைவர் திருமாவளவன் அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் முக நூல் நேரலையில் பேசியதாவது: திமுகவுடனான கூட்டணியில் 2 தொகுதிக்கு உடன்பட்டிருப்பது விசிகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கலாம். கட்சி நலனா, கூட்டணி நலனா, நாட்டு நலனா என்ற கேள்வியின் போது, நாட்டு நலன் முக்கியமானது. அதற்கு கூட்டணி நலன் முன் நிபந்தனையாக இருக்கிறது.
எனவே, கட்சி நலனை அடுத்த நிலைக்கு தள்ளி வைக்க வேண்டிய கட்டாயம் எழுகிறது. கூட்டணியில் யார் பலமாக இருக்கிறோம் என்ற ஒப்பீட்டில் விசிகவுக்கு உடன்பாடில்லை. அக்கறை உள்ளவர்களை போல கருத்துகளை சொல்லி நம் உணர்ச்சியை தூண்டுவார்கள். அதற்கு ஒருபோதும் இரையாகக் கூடாது.
திமுகவையோ, கூட்டணி கட்சிகளையோ விமர்சிப்பது ஒரு போதும் ஏற்புடையதல்ல. தற்போதைய சூழலில், புதிய மாநில, மாவட்ட நிர்வாகத்தை அறிவிக்க இயலாது. இருக்கும் நிலையில் தேர்தல் பணியில் கவனம் செலுத்த வேண்டும். விழுப்புரம், சிதம்பரம் தொகுதிகளிலாவது முழுமையான மாவட்ட நிர்வாகத்தை அறிவிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன்.
வெல்லும் ஜனநாயக மாநாட்டு தீர்மானங்களை விளக்கி மாவட்ட அளவில் பொதுக் கூட்டம் நடத்த வேண்டும். கூட்டம் நடந்த இடங்கள் குறித்த தகவலை தலைமையகத்துக்கு தெரிவிக்க வேண்டும். மாநாட்டை நடத்தாத மாவட்டச் செயலாளர்கள் விசாரணைக்கு ஆளாக நேரிடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.