புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய `ரோடாமைன் பி’ ரசாயனம் கலந்த கோபி மஞ்சூரியன் மற்றும் பஞ்சுமிட்டாய் விற்பனைக்கு கர்நாடக சுகாதாரத்துறை தடை விதித்துள்ளது.
குழந்தைகளும் பெரியவர்களும் அதிகம் விரும்பி உண்ணும் தெருக்கடை உணவுகளில் பஞ்சு மிட்டாயையும், கோபி மஞ்சூரியனையும் குறிப்பிடலாம். ஆனால், இந்த உணவுகள் ஆரோக்கியமான முறையில் செய்யப்படுகின்றனவா என்று கர்நாடக சுகாதாரத் துறை ஆய்வு செய்தது.

இதற்காக பஞ்சு மிட்டாய் மற்றும் கோபி மஞ்சூரியன் விற்கப்படும் தெருவோர கடைகளில் இருந்து 171 உணவு மாதிரிகளைச் சேகரித்து ஆய்வு செய்தது. அதிர்ச்சியூட்டும் வகையில் 107 உணவுகளில் பாதுகாப்பற்ற செயற்கை நிறமிகள் பயன்படுத்தப்பட்டு இருப்பது தெரியவந்தது. 64 உணவு மாதிரிகள் மட்டுமே பாதுகாப்பானதாக இருந்துள்ளன.
இந்த இரண்டு உணவுகளிலும் கலர் வருவதற்காக புற்றுநோயை உண்டாக்கக்கூடிய ரோடமைன்-பி மற்றும் டார்ட்ராசைன் ஆகியவை பயன்படுத்தப்பட்டிருப்பது ஆய்வில் தெரிந்தது. அதனை தொடர்ந்தே இந்த உணவுகளைத் தடை செய்ய கர்நாடக அரசு துரித நடவடிக்கையை மேற்கொண்டது.

“சுகாதார அதிகாரிகள் தொடர்ந்து உணவு விற்பனை நிலையங்களில் திடீர் சோதனைகளை நடத்துவார்கள். தடையை மீறிச் செயல்படுபவர்களுக்கு 7 ஆண்டுகள் ஆயுள் தண்டனையும், 10 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.
மீண்டும் மீண்டும் தடையை மீறுபவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது கடுமையான சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும். ஒருவர் மக்களின் ஆரோக்கியம் மற்றும் உயிருடன் விளையாட முடியாது’’ என கர்நாடகாவின் சுகாதாரத் துறை அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் கூறியுள்ளார்.