மீண்டும் பைடன் vs ட்ரம்ப்: அனல் பறக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் களம் – ஒரு பார்வை

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடக்கவுள்ளது. இந்தத் தேர்தலில் மீண்டும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் குடியரசுக் கட்சியை சார்பில் போட்டியிடுகிறார். அதேபோல் ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடவுள்ளார். இருவரும் நேருக்கு நேர் களம் காணவிருப்பதால் அங்கே தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

வித்தியாசமான தேர்தல் களம்: அமெரிக்காவில் பிரதான அரசியல் கட்சிகள் என்றால் ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சிகள்தான். ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் தற்போது அமெரிக்க அதிபராக உள்ளார். இந்த ஆண்டு (2024) அவரின் பதவிக்காலம் முடியவுள்ளதால் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் களம் சற்று வித்தியாசமானது. அமெரிக்க அதிபர் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் கட்சி உறுப்பினர்களின் ஆதரவைப் பெறவேண்டும். அதற்கு மாகாணங்கள் தோறும் வாக்குப்பதிவு நடைபெறும். இரு கட்சிகள் சார்பிலும் நடக்கும் மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்கள் கட்சியின் அதிபர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பார்கள்.

ஜனநாயகக் கட்சியின் சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன், டீன் பிலிப்ஸ், மரியன்னே வில்லியம்சன் ஆகியோருக்கு இடையில் கடும் போட்டி நிலவி வந்தது. ஆனால், ஜோ பைடனுக்கு ஆதரவு அதிகமாக கிடைத்தது. இதையடுத்து ஜனநாயகக் கட்சியின் சார்பில் அவரே மீண்டும் போட்டியிடுகிறார்.

அதேபோல், குடியரசுக் கட்சியின் சார்பில் டொனால்டு ட்ரம்ப், நிக்கி ஹேலி, விவேக் ராமசாமி இடையே போட்டி நிலவியது. மாகாணங்களில் நடந்த தேர்தலில் பெரிய ஆதரவு இல்லாததால் விவேக் ராமசாமி விலகினார். ட்ரம்ப், ஹேலி களத்தில் இருந்த நிலையில் கடைசி நேரத்தில் அவரும் ஆதரவு குறைவின் காரணமாக விலகினார். இதனால், தற்போது ட்ரம்ப் அதிபர் வேட்பாளராக அக்கட்சியின் சார்பில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

ட்ரம்ப் vs பைடன் என்ன சவால்கள்? – பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் ட்ரம்புக்கு வாய்ப்பு அதிகமாக இருப்பதாகக் கூறுகின்றன. ஆனால், 77 வயதான ட்ரம்புக்கு பெரிய சவால் இருக்கிறது. ட்ரம்ப் மீது நான்கு குற்ற வழக்குகள் இருக்கின்றன. இவற்றில் ஏதேனும் ஒன்று அவருக்கு எதிராக அமைத்தால் கூட தேர்தல் முடிவில் பெரும் தாக்கம் ஏற்படும் எனக் கூறப்படுகிறது.

அதேபோல், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த தவறியது. பொருளாதார பாதிப்பு உள்ளிட்டவை பைடன் மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர் என்றும் கூறப்படுகிறது. ஆயினும் கருத்துக் கணிப்புகளை எல்லாம் புறந்தள்ளிவிட்டு ட்ரம்ப், பைடன் நேரடி தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்க மாறி மாறி அழைப்பு விடுத்து வருகின்றனர். அமெரிக்க அதிபர் தேர்தல் 2024 நவம்பரில்தான் என்றாலும் இப்போதே அங்கு அனல் பறக்கத் தொடங்கிவிட்டது.

உஷாரான ஜெமினி ஏஐ… – ஜெமினி ஏஐ அளித்த பதிலால் இந்திய அரசு தெரிவித்த எதிர்ப்பை அடுத்து கூகுள் நிறுவனம் கடும் சவால்களை சந்தித்த நிலையில், உலகம் முழுவதும் தேர்தல் தொடர்பான எந்த ஒரு கேள்விக்கும் பதிலளிக்கப் போவதில்லை என்ற வகையில் ஜெமினி ஏஐ உஷாராக இயங்கும்படி அதற்கு கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜெமினி ஏஐயிடம் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் – டொனால்ட் ட்ரம்ப் மோதல் பற்றி கேள்வி கேட்கப்பட அதற்கு “இதுபோன்ற சவால்களை சந்திக்க நான் இன்னும் கற்றுக் கொண்டிருக்கிறேன்” என பதில் அளித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.