ஜேர்மன் பாராளுமன்ற பிரதிநிதிகள் குழுவினர் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவைச் சந்தித்தனர்

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த கௌரவ ரினாடே குனாஸ்ட் தலைமையிலான தெற்காசியாவுக்கான ஜேர்மன் பாராமன்ற நட்புறவு சங்கத்தின் தூதுக் குழுவினர் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன, பெண் பாராளுமன்ற ஒன்றியத்தின் பிரதிநிதிகள் மற்றும் இலங்கை ஜேர்மன் பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் பிரதிநிதிகள் ஆகியோரைச் சந்தித்தனர். இந்தச் சந்திப்புக்களில் இலங்கைக்கும் ஜேர்மனுக்கும் இடையிலான உறவுகளைப் பலப்படுத்துவது குறித்து நீண்ட கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

ஜேர்மன் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஊடாக இலங்கைக்கு ஜேர்மன் வழங்கிவரும் ஒத்துழைப்புக்களை நினைவுகூர்ந்த சபாநாயகர், இதன் ஊடாகப் பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு வெளிநாடுகளில் அதிகமான கிராக்கி இருப்பதாகவும் தெரிவித்தார். இதுபோன்று தொழில்நுட்ப விடயத்தில் ஜேர்மன் தொடர்ந்தும் உதவிகளை வழங்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார். நடைபெறவிருக்கும் தேர்தல்கள், சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு, நாட்டை முன்னேற்றுவதற்கு எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்து ஜேர்மன் தூதுக் குழுவினர் கேட்டறிந்ததுடன், இவற்றுக்கு சபாநாயகர் விளக்கமளித்தார்.

இதேநேரம், பெண் பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் கௌரவ (வைத்தியகலாநிதி) சுதர்ஷினி பெர்னாந்துபுள்ளே மற்றும் ஒன்றியத்தின் உறுப்பினரும் சிறுவர்கள், பெண்கள் மற்றும் பாலினம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவருமான கௌரவ தலதா அதுகோரல ஆகியோரையும் ஜேர்மன் தூதுக் குழுவினர் பாராளுமன்ற குழு அறையில் சந்தித்துக் கலந்துரையாடினர். பெண்கள் மற்றும் சிறுவர்களை வலுப்படுத்துவதற்கும் அவர்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் துஷ்பிரயோகங்களைத் தடுப்பதற்கு ஒன்றியத்தின் சார்பில் எடுத்திருக்கும் நடவடிக்கைகள் குறித்து ஜேர்மன் தூதுக் குழுவினருக்கு இங்கு விளக்கமளிக்கப்பட்டது. முன்பிள்ளைப் பருவக் கல்வி மற்றும் தொழிலுக்குச் செல்லும் பெற்றோரின் குழந்தைகளின் பராமரிப்பு போன்ற விடயங்கள் எவ்வாறு முன்னெடுக்கப்படுகின்றன என்பது குறித்தும் ஜேமர்ன் தூதுக் குழுவினர் விளக்கங்களைக் கேட்டறிந்துகொண்டனர்.

அத்துடன், இலங்கை ஜேர்மன் பாராளுமன்ற நட்புறவு சங்கத்தினருக்கும் ஜேர்மன் தூதுக் குழுவினருக்கும் இடையிலான சந்திப்பொன்றும் நடைபெற்றது. இலங்கை ஜேர்மன் பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (பேராசிரியர்) சரித ஹேரத் மற்றும் ஜேர்மன் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ரினாடே குனாஸ்ட் ஆகியோர் இதற்குத் தலைமை வகித்தனர். நட்புறவுச் சங்கத்தின் செயலாளர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா, குறித்த சங்கத்தின் பிரதித் தலைவர்களான கௌரவ நிரோஷன் பெரேரா, கௌரவ (கலாநிதி) ஹரினி அமரசூரிய, பொருளாளர் கௌரவ உதயன கிரிந்திகொட, நட்புறவு சங்கத்தின் உறுப்பினர்களான இராஜாங்க அமைச்சர் கௌரவ அரவிந்த குமார், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ எ.எச்.எம்.பௌசி, கௌரவ இரான் விக்ரமரத்ன,கௌரவ பி.வை.ஜி.ரத்னசுகர, கௌரவ மதுர விதானகே ஆகியோர் கலந்துகொண்டனர்.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் மேம்படுத்தி பரஸ்பர நன்மையை ஏற்படுத்தும் வகையிலான வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்வதில் உறுதியாக இருப்பதை இந்தச் சந்திப்பு எடுத்துக் காட்டுவதாக கௌரவ சரித ஹேரத் குறிப்பிட்டார்.

சர்வதேச நாயண நிதியத்தின் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் விடயங்கள், நாடு எதிர்கொள்ளவுள்ள தேர்தல்கள், பொருளாதார ரீதியில் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து ஜேர்மன் குழுவினர் கேட்டறிந்துகொண்டனர். இவை தொடர்பில் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது நிலைப்பாடுகளை முன்வைத்திருந்தனர். முதலீடுகளை ஊக்குவிப்பதற்கு வெளிப்படைத் தன்மை மற்றும் அதற்கான சூழலில் முன்னேற்றம் ஏற்படுவது அவசியம் என கௌரவ ரினாடே குனாஸ்ட் குறிப்பிட்டார்.

இந்தச் சந்திப்புக்களில் பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் நாயகம் சமிந்த குலரத்ன, உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன, இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் பீலிக்ஸ் நியூமன் உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.