கடந்த 25 வருடங்களாக யோகா, தியானம் என ஆரோக்கியமான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதன் பின், யோகா பயிற்சியாளராகவும் விளங்குகிறார்.
‘ஆனந்தம்’, ‘பையா’, ‘ரன்’ ‘சண்டக்கோழி’ என பல படங்களை இயக்கியவர் லிங்குசாமி. இப்போது ‘பையா 2’ படத்தை இயக்கும் வேலைகளில் இருக்கிறார். இதனிடையே கடந்த பல ஆண்டுகளாக சைக்கிளிங், யோகா என பல பயிற்சிகளையும் தொடர்ந்து செய்து வருகிறார். இப்போது தனது யோகா குருவான தாஜியின் தியான சங்கமத்தில் பங்கேற்று தியான பயிற்சி கொடுத்து வருகிறார். இது குறித்து லிங்குசாமியிடம் கேட்டால், வீடியோ ஒன்றை அனுப்பி வைத்தார்.

”என்னுடைய நண்பர்கள்கிட்ட தியானத்தை பத்திப் பேசினால், ‘என்ன சார் இந்த வயசிலேயே பேசுறீங்க.. அதெல்லாம் வயசான காலத்துல பண்ற விஷயமாச்சே?”னு சொல்வாங்க. பொதுவான கருத்து எல்லோரிடமும் இருக்கிறது. ஆனால் நான், `வாழும் காலத்தில் தான் தியானம் தேவை’ என்று சொல்வேன், வாழ்வில் நடக்கும் நல்லது, கெட்டது எதுவானாலும் அதை எதிர்கொள்ள தியானம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனக்கு என் வாழ்வில் மிகப்பயனுள்ளதாக இருந்திருக்கிறது. நான் 25 வருடமாக தியானம் செய்து கொண்டிருக்கிறேன். நான் இப்போது டிரெயினராகவும் ஶ்ரீ ராமசந்திரா மிஷனின் தியான அமைப்பில் இருக்கிறேன். என் குருநாதர் தாஜியின் யோகா கூடம் ஒன்று ஹைதராபாத்தில் இருக்கிறது. அங்கு கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் அமர்ந்து தியானம் செய்யலாம். என் குருநாதர் தியானம் குறித்து ஒரு மிகப்பெரிய நிகழ்ச்சி நடத்த வேண்டும், அது தான் எனது கனவு என அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பார். அவரது நீண்டநாள் கனவு இப்போது நனவாகிறது. மார்ச் 14ம் தேதியான இன்று தொடங்கி நாளை, நாளை மறுநாள் ஆகிய தினங்களில் இந்த தியானப் பயிற்சி நடக்கிறது.

உலகமெங்கிலும் இருந்து, தியானத்தில் சிறந்த குருநாதர்கள், நிறுவனங்கள் எனப் பலர் கலந்துகொள்கின்றனர். பல நாடுகள் இதில் கலந்துகொள்கின்றன. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்கவுள்ளனர். இது மிக அரிய சந்தர்ப்பம் இந்நிகழ்ச்சியில் நானும் கலந்துகொள்கிறேன். இந்த மகா சங்கமத்தில் நாம் அனைவரும் கலந்துகொள்ள வேண்டுமென்பது, எனது விருப்பம். “குளோபல் ஸ்பிரிச்சுவாலிட்டி சங்கமம்” அனைவரும் வாருங்கள் பயன் பெறுங்கள் நன்றி” என தெரிவித்துள்ளார்.