பெங்களூரு: தேர்தல் பத்திரம் திட்டம் தொடர்பாக சிறப்பு விசாரணை நடத்த வேண்டும் என்றும், அந்த விசாரணை முடியும் வரையில் பாஜகவின் வங்கிக் கணக்கை முடக்கி வைக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்.
பெங்களூருவில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக சாடினார். அவர் கூறுகையில், “தேர்தல் பத்திரத்தில் பல சந்தேகத்துக்குரிய நன்கொடையாளர்கள் உள்ளனர். பத்திரம் வாங்கியவர்களில் பலர் அமலாக்கத் துறை மற்றும் வருமானவரித் துறைகளின் சோதனைக்கோ அல்லது பிற விசாரணை அமைப்புகளின் சோதனைகளுக்கு உள்ளாகியுள்ளனர். தேர்தல் பத்திரம் மூலமாக பாஜக பல கோடி ரூபாய் வசூலித்துள்ள நிலையில், நன்கொடை வசூல் செய்ததற்காக மட்டும் ஏன் காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கு ஏன் முடக்கப்பட்டுள்ளது?
பிரதமர் எப்போதும் இது மோடியின் அரசு, மோடியின் கட்சி என்று கூறி வருகிறார். அதனால் பத்திரங்கள் மூலம் பணம் வசூல் செய்ததற்கும் அவர் பொறுப்பேற்க வேண்டும்.
பிரதமர் மோடி நான் சாப்பிட மாட்டேன், பிறரையும் சாப்பிட விடமாட்டேன் என்று கூறியுள்ளார். ஆனால், தேர்தல் பத்திரங்கள் வழியாக பாஜக பணம் சம்பாதித்துள்ளது உச்ச நீதிமன்றம் வழியாக வெளியே வந்துள்ளது. எஸ்பிஐ வங்கியின் தரவுகள் பாஜக 50 சதவீதம் நன்கொடை பெற்றுள்ளதையும், காங்கிரஸ் கட்சி 11 சதவீதம் நன்கொடையை பெற்றுள்ளதைக் காட்டுகின்றன.
ரூ.300 கோடி பணம் வைத்திருந்ததற்காக தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. இதனைச் செய்வதற்காக வருமான வரித் துறைக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. வங்கிக் கணத்து முடக்கப்பட்டால் நாங்கள் எப்படி தேர்தலைச் சந்திப்போம்.
தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக கோடிகணக்கான ரூபாய் வசூலித்துள்ளது. காங்கிரஸ் கட்சியோ கட்சிக்காரர்கள், எம்பிகள் மற்றும் பிற சிறு நன்கொடையாளர்கள் மூலம் நன்கொடை பெற்றுள்ளது. எங்களுடைய வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. அவர்களுடையை கணக்கு எதுவும் செய்யப்படவில்லை. அவர்கள் ரூ.6,000 கோடி வசூல் செய்துள்ளனர்.
எதிர்க்கட்சிகளின் வங்கிக் கணக்குகளை முடக்கிவிட்டால் அவர்கள் எப்படி தேர்தலில் எப்படி போட்டியிடுவார்கள். இங்கே களத்தில் சமநிலை எங்கே நிலவுகிறது? அதனால், இந்த விவகாரகத்தில் ஓர் உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், வழக்கில் உண்மை வெளி வரும் வரை அவர்களின் (பாஜக) வங்கிக் கணக்கு முடக்கப்பட வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன். ஏதாவது செயலுக்கான வெகுமதியாகவோ அல்லது அச்சுறுத்தல் மூலமாகவோ அல்லது வழக்குகளை முடித்து வைப்பதற்காக நன்கொடையாக இந்த தொகைகள் பெறப்பட்டனவா என்பது சிறப்பு விசாரணை நடத்த வேண்டும்” என்று கார்கே வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, எஸ்பிஐ வங்கி அளித்த தேர்தல் பத்திரங்களின் விவரங்களை தேர்தல் ஆணையம் தனது அதிகாரபூர்வ தளத்தில் வியாழக்கிழமை பதிவேற்றம் செய்திருந்தது. அதன்படி, பாஜக ஐந்து ஆண்டுகளில் தேர்தல் பத்திரங்கள் மூலமாக ரூ.6,068 கோடி பெற்றிருந்தது. அந்த தகவலில், கடந்த 2019 முதல் 2024 வரையில் மொத்தம் 1,260 நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம் மற்றும் ரூ.1 கோடி ஆகிய மூன்று மதிப்புள்ள 22,217 பத்திரங்களை வாங்கியிருந்த விவரங்கள் இடம்பெற்றிருந்தன. 23 அரசியல் கட்சிகள் இந்த பத்திரங்களை பணமாக்கி இருந்தன.
ஃப்யூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ் என்ற நிறுவனம் மேகா இன்ஜினியரிங் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர்ஸ் லிமிடெட் நிறுவனங்கள் நன்கொடை அளித்ததில் முதலிடத்தில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. | வாசிக்க > டாப் நிறுவனங்கள், கட்சிகள் எவை? – தேர்தல் பத்திர தரவுகளும் நிதிப் பட்டியலும்
இதனிடையே, தேர்தல் பத்திரங்கள் தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவில் திருத்தம் கோரி தலைமைத் தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையில் 5 பேர் கொண்ட அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், தேர்தல் பத்திர விவரங்களை எஸ்பிஐ வங்கி முழுமையாக வெளியிடாதது ஏன்? பத்திரங்களின் பிரத்யேக எண்ணை ஏன் குறிப்பிடப்படவில்லை என்று வினவினர். தேர்தல் பத்திரத்தின் எண்கள் தான் அதனை வாங்குபவர்களையும், நன்கொடையைப் பெற்றவர்களையும் இணைக்கக் கூடியது. அதை அளித்தால்தான் விவரங்கள் முழுமை பெறும். எனவே அதனை வங்கி தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
தேர்தல் பத்திரம் மூலம் அரசியல் கட்சிகள் நிதி திரட்டும் வழக்கம் கடந்த 2018-ம் ஆண்டில் ‘தேர்தல் பத்திரம் திட்டம்’ மூலம் நடைமுறைக்கு வந்தது. இந்த சூழலில் தேர்தல் பத்திரம் மூலம் அரசியல் கட்சிகள் நிதி திரட்டும் நடவடிக்கை சட்டவிரோதமானது என்று கூறி, அந்த நடைமுறையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து கடந்த பிப்ரவரியில் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.