Doctor Vikatan: எங்கள் வீட்டில் நாய்க்குட்டிகள், பூனைக்குட்டிகள், பறவைகள் வளர்க்கிறோம். இப்படி செல்லப் பிராணிகள் வளர்ப்பவர்கள், ஆறு மாதங்களுக்கொரு முறை பூச்சி மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிறார் என் நண்பர். அது உண்மையா….? எல்லா வயதினரும் ஒரே அளவிலான பூச்சி மருந்து எடுத்துக்கொள்ளலாமா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன்

பூச்சி மருந்து என்பது ஒரு வயதைக் கடந்த எல்லோருக்கும் ஒரே டோஸ்தான் பரிந்துரைக்கப்படும். ‘ஆல்பெண்டஸோல்’ (Albendazole) என்ற மருந்தை 400 மில்லிகிராம் அளவுக்கு ஒரு டோஸ் பரிந்துரைப்போம்.
வளர்ப்புப் பிராணிகள் வைத்திருப்போருக்கு ரெகுலராக பூச்சி மாத்திரையைக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. நம்மூரைப் பொறுத்தவரை தண்ணீர் மாசு அதிகம். அதனால், எல்லோருமே வருடத்துக்கொரு முறை பூச்சி மருந்துகள் எடுத்துக்கொள்வது நல்லது. செல்லப் பிராணிகள் வைத்திருப்போருக்கு வரும் பூச்சித் தாக்குதல், வழக்கமான பூச்சித் தாக்குதலாக இருக்காது. சில பூச்சிகளுக்கு ஆல்பெண்டஸோல் மாத்திரையே போதுமானதாக இருக்கும்.

‘லார்வா மைக்ரன்ஸ்’ (Larva migrans) என்ற பூச்சிகள் மிருகங்களிடம் காணப்படும். அவற்றிடமிருந்து நமக்கும் அந்தப் பூச்சிகளின் தாக்கம் தொற்றிக்கொள்ளும். அந்தப் பூச்சிகளுக்கான மருந்துகளின் டோஸ் வேறுபடும். அதாவது லார்வா மைக்ரன்ஸ் பூச்சி பாதிப்போடு ஒருவர் வந்தால் அவருக்கு நாங்கள் பரிந்துரைக்கும் மருந்து, வழக்கத்தைவிட 3 முதல் 6 மடங்கு அதிகமாக இருக்கும். அத்துடன் வேறு ஒரு மருந்தும் சேர்த்துக் கொடுக்கப்படும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.