திருவனந்தபுரம், ரஷ்ய அதிபர் தேர்தலையொட்டி, கேரளாவின் திருவனந்தபுரத்தில் அமைக்கப்பட்ட சிறப்பு ஓட்டுச்சாவடியில், ரஷ்யர்கள் ஆர்வமுடன் ஓட்டளித்தனர்.
ரஷ்ய அதிபர் தேர்தல் நேற்று துவங்கி, நாளை வரை மூன்று நாட்கள் நடக்கிறது. ரஷ்யாவுக்கு உள்ளேயே, 11 விதமான நேர மண்டலங்கள் உடைய மாகாணங்களைச் சேர்ந்த மக்கள் ஆர்வமுடன் ஓட்டளித்து வருகின்றனர்.
உக்ரைன் போருக்குப் பின், ரஷ்யா உடன் இணைக்கப்பட்ட உக்ரைன் பகுதி மக்களும் இந்த தேர்தலில் ஓட்டளித்து வருகின்றனர்.
இதுதவிர, வெளிநாடுகளில் வாழும் ரஷ்யர்கள் ஓட்டளிக்க வசதியாக பல்வேறு நாடுகளிலும் சிறப்பு ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டன.
இதன்படி, கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள ரஷ்ய துணைத் துாதரகமான ரஷ்யா இல்லத்தில் சிறப்பு ஓட்டுச்சாவடி அமைக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, சென்னையில் உள்ள ரஷ்ய துாதரகம் செய்துள்ளது.
கேரளாவில் நிரந்தரமாக தங்கியிருக்கும் ரஷ்யர்களும், சுற்றுலா வந்த ரஷ்யர்களும் நேற்று ஆர்வமுடன் ஓட்டளித்தனர்.
ரஷ்ய அதிபர் தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு, கேரளாவில் மூன்றாவது முறையாக நடக்கிறது. இதற்கு முழு ஒத்துழைப்பு அளித்த ரஷ்ய மக்களுக்கு, திருவனந்தபுரத்தில் உள்ள ரஷ்ய துணை துாதரகத்தின் கவுரவ துாதரும், ரஷ்ய இல்லத்தின் இயக்குனருமான ரதீஷ் நாயர் நன்றி தெரிவித்தார்.
ரஷ்ய தேர்தலில், அதிபர் விளாடிமிர் புடினை எதிர்த்து, சுதந்திர ஜனநாயக கட்சியைச் சேர்ந்த லியோனிட் ஸ்லட்ஸ்கி, புதிய மக்கள் கட்சியை சேர்ந்த விளாடிஸ்லாவ் தவன்கோவ், கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நிகோலாய் கரிடோனோவ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement