தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் சேப்பாக்கம் மைதானத்தில் 100 டெஸ்ட் போட்டிகளை நிறைவு செய்திருக்கும் கிரிக்கெட் வீரர் அஷ்வினுக்குப் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் பங்கேற்ற அஷ்வின் ரொம்பவே உருக்கமாகப் பேசியிருந்தார்.

அவர் பேசியவை இங்கே…
“என்னுடன் விவாதித்து வெல்வது கடினம் என அனில் கும்ப்ளேவும் டிராவிட்டும் கூறினார்கள். ஆம், அது உண்மைதான். ஏனெனில், விவாதங்களை நான் கற்றுக்கொள்வதற்கான கருவியாகப் பார்க்கிறேன். எந்த நபருடன் விவாதம் செய்கிறோம் என்பது முக்கியமில்லை. விவாதத்தின் முடிவில் நம்மை முன்னேற்றிக் கொள்ளும் வகையில் நாம் கற்றுக்கொள்ளும் விஷயங்கள்தான் முக்கியம். எனக்கு ஆசிரியராக இருந்து விஷயங்களைக் கற்றுக்கொடுத்தவர்களையும் என் வாழ்வின் கடினமான பாடங்களை உணரச் செய்தவர்களையும் என்றைக்கும் மறக்கவே மாட்டேன்.
2008-ல் ஐ.பி.எல் தொடர் தொடங்கப்பட்டது. பல கோடிகள் முதலீட்டுடன் சென்னை அணி உள்ளே இறங்கியது. அந்த அணிக்கான வீரர்களைத் தேர்வு செய்யும் பணி நடந்து கொண்டிருந்தது. அப்போது நான் இந்தியா சிமெண்ட்ஸூக்கு எதிரான போட்டி ஒன்றில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தேன். அன்று மாலை நடந்த பரிசளிப்பு விழாவில் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் அவர்கள், ‘டேய்… அஷ்வினே பின்னிட்டடா…’ என்றவர், ‘அவன் சிஎஸ்கே டீமூல இருக்குறாம்ல… எடுத்துட்டீங்கள்ல…’ என சிஎஸ்கே நிர்வாகி ஒருவரைப் பார்த்து கேட்டுவிட்டார். அங்கிருந்துதான் சென்னை அணியில் என்னுடைய பயணம் தொடங்கியது.

மகேந்திர சிங் தோனி எனக்குக் கொடுத்த வாய்ப்புகளுக்காக வாழ்நாள் முழுவதும் அவருக்கு நன்றியுடன் இருப்பேன். அவர்தான் கெய்லுக்கு முதல் ஓவரை என்னை வீச வைத்தார். 17 ஆண்டுகள் கழித்து அனில் கும்ப்ளே அந்த நிகழ்வை இன்றைக்கு நினைவுகூர்கிறார்.
அந்தளவுக்கு முக்கியமான தருணம் அது. 2013-ல் ஒரு தொடரின் போது என்னை அணியிலிருந்து ட்ராப் செய்யும் முடிவில் இருந்தார்கள். தோனிதான் ‘அவர் கடந்த சீரிஸில் சிறப்பாக ஆடியிருக்கிறார் எனக் கூறி எனக்காக இயன்றளவுக்கு சப்போர்ட் செய்து அணியில் எடுத்தார்.

நாளை நான் உயிரோடு இல்லையென்றாலும் என்னுடைய ஆன்மா இந்த சேப்பாக்கத்தை சுற்றிக்கொண்டேதான் இருக்கும். அந்தளவுக்கு இந்த இடம் எனக்கு முக்கியமானது.”
எனக் கூறியவர் தனது கரியரில் தனக்கு உதவியாக இருந்த அனைவருக்கும் நன்றி கூறியிருந்தார். அஷ்வினுக்கு நினைவுப் பரிசோடு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 1 கோடி ரூபாய் வெகுமதியாகவும் வழங்கப்பட்டது.
வாழ்த்துகள் அஷ்வின்!