2024 பொதுத்தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முதற்கட்ட வாக்குப் பதிவுகளில் தமிழகத்தில் வாக்குப் பதிவு ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற இருக்கிறது. நாடு முழுவதும் 7 கட்டமாக நடத்தப்படும் வாக்குப்பதிவுகளின் முடிவுகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட இருக்கின்றன. இந்த நிலையில், ஜோதிட அடிப்படையில் இந்தத் தேதிகளின் முக்கியத்துவம் என்ன? இவை எந்தக் கட்சிக்கு சாதகமான நாள்களாக அமையும் என்பது குறித்து பிரபல ஜோதிடர் பாரதிஶ்ரீதரிடம் பேசினோம்.

“இந்திய நாடாளுமன்றத்துக்கான பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 19-ம் தேதி நடக்க இருக்கிறது. இந்த நாளைப் பொறுத்தவரை நாள் முழுவதும் ஏகாதசி திதி உள்ளது. நட்சத்திரமாக மகம் நட்சத்திரம் அமைகிறது. கிரக நிலைகளைப் பொறுத்தவரை முக்கிய கிரகங்களான குரு, சூரியன், சனி, ஆகிய கிரகங்கள் முறையே மேஷம், கும்பம் ஆகிய ராசிகளில் சஞ்சரிக்கின்றன. கேது கன்னியிலும் ராகு மீனத்திலும் சஞ்சாரம் செய்கிறார்கள். கும்பத்தில் சனியுடன் செவ்வாய் சேர்ந்து சஞ்சாரம் செய்கிறார். இந்த அடிப்படையில் தமிழகத்தில் நடைபெறும் வாக்குப்பதிவு யாருக்குச் சாதகமாக இருக்கும் என்பதைப் பார்ப்போம்.
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சிம்ம ராசிக்காரர். தற்போது சிம்ம ராசிக்கு 7-ல் சனி, 8-ல் ராகு, 2-ல் கேது என்னும் நிலையில் முக்கிய சஞ்சாரங்கள் அமைந்துள்ளன. கடந்த டிசம்பர் மாதம் வரை சாதகமாக இருந்த சனிபகவான் தற்போது 7-ல் சஞ்சரிப்பதால் சிம்ம ராசிக்காரர்கள் தற்போது ஒரு சில பிரச்னைகளைச் சந்திக்க நேரிடும். என்றாலும் 9-ல் குரு அமர்ந்து பலன் தருகிறார். ராசிக்கு குருபார்வையும் கிடைக்கிறது. எனவே சிக்கல்களைக் கடந்து முன்னேறும் நிலை அமைந்துள்ளது.

இந்த ஆண்டு குருப்பெயர்ச்சி மே 1-ம் தேதி நடைபெற உள்ளது. எனவே வரும் குருப்பெயர்ச்சி சிம்ம ராசிக்கு சாதகமாக இல்லை. என்றாலும் வாக்குப் பதிவு நாள் சாதகமாகவே உள்ளது. அவர்களின் ராசி நாதன் குருபகவானோடு இணைந்திருக்கும் நாளாகவும் திகழ்கிறது. சந்திரனும் சிம்ம ராசியில்தான் சஞ்சரிக்கிறார். எனவே சனியின் சஞ்சாரம் மோசமாக இருந்தபோதிலும் குருவின் பார்வையால் இவர் சமாளித்து அதிக அளவில் வெற்றியை அடைவார் என்று சொல்லலாம்.

பொதுவாகவே பெயர்ச்சி தொடங்கும் ஒரு மாதத்துக்கு முன்பாகவே அந்த வரும் சஞ்சாரத்துக்கான பலன்களை குரு வழங்கத் தொடங்கிவிடுவார் என்பது அனுபவத்தில் கண்டது. இதைச் சொல்லக் காரணம் எதிர்க்கட்சித்தலைவராகத் திகழும் எடப்பாடி பழனிச்சாமி, கன்னி ராசியைச் சேர்ந்தவர். எனவே அவர் இதுவரை இருந்த சுணக்கங்களில் இருந்து வெளியேறி செயல்படத் தொடங்கும் காலமாக இது அமைகிறது. தற்போது சனிபகவான் கன்னிராசிக்குச் சாதகமாக இருக்கிறார். குருபகவான் சாதகமில்லாமல் இருக்கிறார். ஆனால் வாக்கு எண்ணிக்கைத் தேதியில் குருபகவான் பெயர்ச்சியாகி கன்னி ராசிக்கு பாக்கியஸ்தானத்தில் சஞ்சரிப்பார். எனவே நிச்சயம் தேர்தல் முடிவுகளில் அவர் ஓரளவு வெற்றிகளைப் பெற்றுத் தெளிவான அரசியல் நகர்வை ஏற்படுத்துவார் என்று நம்பலாம்.
மத்தியில் முக்கியமான இரண்டு தலைவர்கள் என்றால் நரேந்திர மோடியையும் ராகுல் காந்தியையும் குறிப்பிடலாம். இருவருமே விருச்சிக ராசிக்காரர்கள்தான் என்றாலும் ராகுல் காந்தி கேட்டை நட்சத்திரத்துக்கு உரியவர். மோடி அனுஷ நட்சத்திரத்தைச் சேர்ந்தவர். மே 1-ம் தேதி நடைபெறும் குருப்பெயர்ச்சி விருச்சிக ராசிக்குச் சாதகமாக உள்ளது.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளில் விருச்சிக ராசிக்கு 7-ம் இடத்தில் நான்கு கிரக சேர்க்கை அமைகிறது. ராசிக்கு குருபார்வையும் கிடைக்கிறது. எனவே அதன் பலன் முழுமையாக விருச்சிக ராசிக்காரர்களுக்குக் கிடைக்கும். ராசி அடிப்படையில் இருவருக்குமே குருப்பெயர்ச்சி சாதகமாகக் காணப்பட்டாலும் ராகுல் காந்தியின் தனிப்பட்ட ஜாதகத்தில் தற்போது செவ்வாய் தசை நடைபெறுகிறது. எனவே அவருக்கு கோசார ரீதியான கிரக சஞ்சாரங்கள் பலன் தராது. எனவே மத்தியில் மீண்டும் மோடியே பிரதமராக அமர்வார் என்று ஜோதிட அடிப்படையில் சொல்லமுடியும். அதுவும் ஆட்சி அதிகாரம் ஆகியவற்றுக்குரிய சூரியன் குருவோடு இணைந்திருக்கும் நேரத்தில் வெளியாகும் இந்த முடிவுகள் மிகவும் வலிமையான ஒன்றாக அமையும் என்றும் சொல்ல இடம் உண்டு” என்றார் பாரதி ஶ்ரீதர்.