புதுடில்லி, ‘தேர்தல் பத்திர விபரங்களை வெளியிட்ட எஸ்.பி.ஐ., வங்கி, அதில் இடம் பெற்றுள்ள தனித்துவமான, ‘ஆல்பா நியூமரிக்’ எண்களை வெளியிடாதது ஏன்?’ என, உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தேர்தல் பத்திரங்கள் வாயிலாக அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கியவர்களின் முழு விபரங்களை வெளியிடும்படி எஸ்.பி.ஐ., எனப்படும், பாரத ஸ்டேட் வங்கிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அந்த உத்தரவில், பத்திரங்களை வாங்கியவரின் பெயர், தொகை, வாங்கப்பட்ட தேதி, எந்த கட்சி அதை பணமாக்கியது உள்ளிட்ட விபரங்களை கடந்த 12ம் தேதிக்குள் அளிக்கும்படி உத்தரவில் குறிப்பிட்டு இருந்தது.
அந்த விபரங்களை, தலைமை தேர்தல் ஆணையம், மார்ச் 15ம் தேதிக்குள் தங்கள் இணையதளத்தில் வெளியிடவும் உத்தரவிட்டது.
இதை தொடர்ந்து, தேர்தல் பத்திர விபரங்களை தலைமை தேர்தல் கமிஷனிடம் எஸ்.பி.ஐ., சமர்ப்பித்தது. அந்த விபரங்கள் அனைத்தும், தேர்தல் கமிஷனின் இணையதளத்தில் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன.
இந்நிலையில், தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கில், கடந்த 11ம் தேதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் திருத்தம் கோரி, தலைமை தேர்தல் கமிஷன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.
இந்த மனு, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அமர்வு கூறியதாவது:
கடந்த 11ம் தேதி பிறப்பித்த உத்தரவில், தேர்தல் பத்திரங்கள் குறித்து அனைத்து விபரங்களையும் சமர்ப்பிக்கும்படி எஸ்.பி.ஐ.,க்கு உத்தரவிடப்பட்டது.
ஆனால், பத்திரத்தில் இடம் பெற்ற தனித்துவமான எண்களை அவர்கள் வெளியிடவில்லை. அந்த எண்கள் தான் பத்திரங்களை வாங்கியவர்களையும், நன்கொடையை பெற்றவர்களையும் இணைக்க கூடியது.
எந்த நிறுவனம், எந்த தேதியில், எந்த கட்சிக்கு நன்கொடை வழங்கியது என்பதை, அதன் வாயிலாக தெரிந்து கொள்ள முடியும். அதையும் சமர்ப்பித்தால் தான் விபரங்கள் முழுமை பெறும். எனவே, தனித்துவ எண்களை எஸ்.பி.ஐ., வங்கி சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அமர்வு கூறியது.
பின், எஸ்.பி.ஐ., தரப்பில் ஆஜராகி இருப்பது யார்? என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ஆனால், யாரும் ஆஜராகாததை அறிந்த நீதிபதிகள், எஸ்.பி.ஐ.,க்கும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இது தொடர்பாக எஸ்.பி.ஐ., வங்கிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை நாளை மறு நாள் ஒத்தி வைத்தனர்.
தனித்துவ எண் ஏன் முக்கியம்?
ஒவ்வொரு தேர்தல் பத்திரத்திலும், தனித்துவமான எண்கள் இடம் பெற்று இருக்கும். ‘ஆல்பா நியூமரிக்’ எனப்படும், ஆங்கில எழுத்துடன் கூடிய எண்கள் இடம் பெற்று இருக்கும். இதை, ‘யுவி’ எனப்படும், புற ஊதா கதிர்கள் வாயிலாக மட்டுமே பார்க்க முடியும். பத்திரத்தை வாங்குபவருக்கும், பயனடைந்த அரசியல் கட்சிக்கும் இடையே ஒரு தொடர்பை ஏற்படுத்துவதால், இதை பொருத்த குறியீடு என்றும் கூறுவர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்