சென்னை: நீங்கள் நலமா? திட்டத்தின் கீழ் பள்ளி,கல்லூரி மாணவிகள் உட்பட 5 பயனாளிகளிடம் முதல்வர் மு.க.ஸ்டா லின் கருத்துகளைக் கேட்டறிந்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: முதல்வரின் முகவரி துறையின் கீழ் பயனாளிகளைத் தொடர்பு கொண்டு அரசின் நலத்திட்டங்கள் குறித்த கருத்துகளைக் கேட்டறியும் புதுமை திட்டமான ‘நீங்களும் நலமா?’ திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 6-ம் தேதி தொடங்கி வைத்தார்.
அதைத்தொடர்ந்து, பயனாளிகளிடம் நேரடியாக தொலைபேசி யில் தொடர்புகொண்டு, மக்கள் நலத்திட்டங்கள் குறித்து அவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்தார். அதன் தொடர்ச்சியாக, முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது முகாம் அலுவலகத்தில் இருந்து பல்வேறு பயனாளிகளை காணொலி மூலமாக நேற்று தொடர்பு கொண்டார்.
‘அம்பேத்கர் தொழில் முன்னோடி’ திட்டத்தின்கீழ் பயன்பெற்ற மதுரை, தெப்பக்குளத்தைச் சேர்ந்தசி.விஜய் ஆனந்தை, முதல்வர் காணொலி மூலமாகத் தொடர்பு கொண்டார். அப்போது விஜய்ஆனந்த், ‘‘அரசின் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தின்மூலம், எவ்விதத் தடங்கலுமின்றி விரைவாக ரூ.5 கோடி வங்கிக் கடன் பெற்று, அதன்மூலம் மருத்துவ உபகரணங்கள் அனைத்தும் கொள்முதல் செய்துள்ளேன். தற்போது தொழில்முனைவோராகி 30 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து வருவது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது’’ என தெரிவித்தார்.
மகளிர் சுய உதவிக்குழுவின் கீழ் பயன்பெற்ற கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரைச் சேர்ந்த வி.பானுப்பிரியாவை முதல்வர் தொடர்புகொண்டு பேசினார். அப்போது பானுப்பிரியா, தான் முத்துமாரியம்மன் மகளிர் குழுவில் உறுப்பினராக உள்ளதாகவும், வங்கியில் இருந்து கிடைத்த கடன் தொகையைக் கொண்டு தனது அரிசி கடையை விரிவாக்கம் செய் துள்ளதாகவும் தெரிவித்தார்.
சென்னை, வேப்பேரியில் உள்ளஆதிதிராவிடர் நல விடுதியில் தங்கி படித்து வரும் திருவண்ணாமலை மாவட்டம், வற்றாபுத்துர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி எஸ்.பிரியதர்ஷினியை முதல்வர் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது பிரியதர்ஷினி, தான் வியாசர்பாடி டாக்டர் அம்பேத்கர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.எஸ்சி., (நியூட்ரிஷன்) படித்து வருவதாகவும், புதுமைப் பெண்திட்டத்தில் மாதம் ரூ.1,000 உதவித்தொகை பெற்று வருவதாகவும் நன்றியுடன் தெரிவித்தார்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற்று வரும் அரியலூர் மாவட்டம், கோவிந்தபுதூரைச் சேர்ந்த ராதிகாவை முதல்வர் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது ராதிகா, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை பெற்றுவருவதாகவும் அதற்கு முதல்வருக்கு நன்றி தெரிவித்தார்.மேலும்,ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தனது மகனுக்கு உதவும்படி கேட்டுக் கொண்டார். அதற்கு முதல்வர், அவரது மகன் சிகிச்சைக்கு தேவையான உதவிகளை செய்து தருவதாகத் தெரிவித்தார்.
‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் கீழ் பயன்பெற்ற கடலூர்மாவட்டம், பண்ருட்டியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ப்ரீத்தாவை முதல்வர் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, மாணவி ப்ரீத்தா,தனக்கு சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளதால் ‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டத்தில் 5 நாட்களுக்கு ஒருமுறை மருத்துவர்கள் வீட்டுக்கே வந்து, அனைத்து பரிசோதனைகளையும் மேற்கொண்டு, மருந்து, மாத்திரைவழங்கி வருவதாக தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, முதல்வரின் முகவரித்துறை சிறப்பு அலுவலர் த.மோகன் ஆகியோர் உடன் இருந்தனர்.