Doctor Vikatan: பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு காலில் ரத்தக்கட்டி இருந்ததாகவும், அதற்காக அவரை அவசரமாக மருத்துவமனையில் அனுமதித்து ஆஞ்சியோபிளாஸ்டி அறுவை சிகிச்சை செய்ததாகவும் செய்திகள் வருகின்றனவே… ஆஞ்சியோபிளாஸ்டி என்பது இதயத்தில் செய்யப்படும் சிகிச்சைதானே… காலில் ரத்தக் கட்டி ஏற்படுமா… அதற்கும் ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்படுமா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்.

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இந்தப் பிரச்னைக்கு ‘பெரிபெரல் ஆர்ட்டீரியல் டிசீஸ்’ (Peripheral arterial disease) என்று பெயர். அதாவது இதயத்திலிருந்து மற்ற உறுப்புகளுக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் வரும் அடைப்பு.
உடலின் எந்த ரத்தக் குழாயிலும் ‘அதிரோஸ்கிளீரோசிஸ்’ (Atherosclerosis) என்ற பாதிப்பு வரலாம். அதாவது இதயத்தின் ரத்தக்குழாய்களில் அடைப்பு வருவதைப் போல வேறு எந்த ரத்தக் குழாயிலும் அடைப்பு வரலாம். அந்த வகையில் நடிகர் அமிதாப் பச்சனுக்கு வந்ததாகக் குறிப்பிட்டிருப்பது போல கால்களில் உள்ள ரத்தக்குழாய்களிலும் அடைப்பு வரலாம்.
இதய நோய்களை ஏற்படுத்தும் ரிஸ்க் காரணிகள் அனைத்தும் கால்களில் ஏற்படும் ரத்தக்குழாய் அடைப்புக்கும் பொருந்தும். புகைப்பழக்கம் உள்ளவர்கள், கட்டுப்பாடற்ற சர்க்கரைநோய் உள்ளவர்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் போன்றோர் ரிஸ்க் பிரிவில் வருவார்கள்.

கால்களில் ஏற்படும் ரத்தக் குழாய் அடைப்பின் அறிகுறிகள் எப்படியிருக்கும் என்று தெரிந்துகொள்வதும் எல்லோருக்கும் அவசியமாகிறது. கட்டுப்பாடற்ற சர்க்கரைநோய் உள்ளவர்களுக்கு புண்கள் வரும். அவை ஆறாமல் இருக்கும். அடிபட்டால்கூட காயங்கள் சீக்கிரம் ஆறாது. புண்கள் ஆறுவதற்கு ரத்தம் அடிப்படை. அந்த ரத்தம் போவதில் தடை ஏற்படுவதால் காயங்கள் ஆறாது. தடைப்பட்ட ரத்த ஓட்டத்தைச் சீராக்கிவிட்டால், இந்தக் காயங்களை எளிதில் ஆற்றமுடியும்.
சிலருக்கு நடக்கும்போது கணுக்கால் பகுதியில் வலி இருப்பதாகச் சொல்வார்கள். மருத்துவ ரீதியாக அந்தப் பிரச்னைக்கு ‘இன்டர்மிட்டென்ட் க்ளாடிகேஷன்’ (Intermittent claudication) என்று பெயர். சிலருக்கு இந்த வலி தொடைப்பகுதியிலும் வரலாம். அதாவது, எந்தப் பகுதியின் ரத்தக்குழாய் பாதிக்கப்பட்டிருக்கிறதோ, அதைப் பொறுத்து வலி வரலாம். இந்தப் பிரச்னையை எமர்ஜென்சியாக அணுக வேண்டுமா என்பது அவரவர் பாதிப்பின் தீவிரத்தைப் பொறுத்தது.

உதாரணத்துக்கு, ஒருவருக்கு கால்களில் ஏற்பட்ட புண் ஆறாமல், காலையே வெட்ட வேண்டி வந்தால், அது எமர்ஜென்சியாக சிகிச்சை அளிக்கப்பட வேண்டியது. அதுவே, நடக்கும்போது கணுக்கால் அல்லது தொடையில் வலி மட்டும் இருக்கிறது என்றால் அதை எமர்ஜென்சியாக கருத வேண்டியதில்லை.
தடைப்பட்ட ரத்தத்தை மீண்டும் ஓடச் செய்வதுதான் சிகிச்சையின் நோக்கம். அந்த வகையில் இதற்கு ஆஞ்சியோபிளாஸ்டி அல்லது பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்படும். குறிப்பாக பெரிபெரல் ஆஞ்சியோபிளாஸ்டி அறுவை சிகிச்சை செய்யப்பட்டால் அன்றைய தினமே மருத்துவமனையிலிருந்து வீட்டுக்குத் திரும்பிவிடலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.