சமீபத்தில், சென்னை யில் நடந்து முடிந்த புத்தகக் காட்சி அரங்கில், தொகுப்பாளினியாக கவனத்தை ஈர்த்த திருநங்கை ஜெஸ்சி:
எனக்கு சொந்த ஊர், திருத்தணி அருகே இருக்கும் ராமகிருஷ்ணராஜு பேட்டை. நான் பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாமே இந்தக் கிராமத்தில் தான்.
பள்ளிப் படிப்பின்போது எனக்கு மனரீதியான மாற்றம் வந்தது. ஆனால், அதை யாரிடம், எப்படிச் சொல்வது, என்ன செய்வது என்று புரியாமலேயே கடந்தேன்.
பல விஷயங்களுக்கு பயந்து, மாணவனைப் போலவே பேன்ட், சட்டை அணிந்தேன், தலை சீவினேன், செருப்பும் அணிந்தேன். ஆனால், என் நடை, பாவனையில் ஒரு பெண்ணின் நளினம் தெரிந்தது.
என்னை கூர்ந்து கவனித்த என் அம்மா, ‘என்னடா நடை இது… பொம்பள பிள்ளையாட்டம்? ஆம்பளையா லட்சணமா நடந்துக்கோ…’ என்று கடிந்து கொண்டார். இதனால், கம்பீரமாக நடந்து, நடித்துக் கொண்டிருந்தேன்.
சுவாமி விவேகானந்தரின், ‘கல்வி என்பது மனித நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியது’ என்ற தன்னம்பிக்கை வாசகமும் என்னைத் துாங்க விடாமல் செய்தது.
எனவே, திருநங்கைக்கான உணர்வுகளை மறந்து, படிப்பில் கவனம் செலுத்த துவங்கினேன்.
எனக்கு பிடிபடாத ஆங்கிலத்தை வசப்படுத்த, திருத்தணி அரசுக் கல்லுாரியில் பி.ஏ., ஆங்கிலம் படித்தேன். எம்.ஏ., ஆங்கிலத்தை, சென்னை வியாசர்பாடி அம்பேத்கர் கலைக் கல்லுாரியில் முடித்தேன்.
ஆங்கில இலக்கியத்தில் பிஎச்.டி., முடிக்க சென்னை லயோலாவில் விண்ணப்பித்தேன். அங்கு, எனக்கு நல்வழி காட்டினார், ஆங்கிலத் துறை தலைவரும், இணைப் பேராசிரியையுமான டாக்டர் பி.மேரி வித்யா பொற்செல்வி.
விளைவு, பல தங்கப் பதக்கங்களை வென்றேன். வித்யா மேடமை என் கல்வி கடவுளாக நினைத்ததால், எனக்குள் இருந்த திருநங்கை மாற்றங்களை அவரிடம் பகிர்ந்து கொண்டேன்.
அதன்பின், அறுவை சிகிச்சைகள் செய்து, முழு திருநங்கையாக மாறினேன். நான் படித்த அம்பேத்கர் கலைக் கல்லுாரியில் இப்போது கவுரவ விரிவுரையாளராக இருக்கிறேன்.
ஓர் எளிய குடும்பத்தில் பிறந்து, என்னுடைய கனவுகளை மறந்து, இவ்வளவு துாரம் பயணித்திருக்கிறேன் என்றால், அது என்னுடைய தன்னம்பிக்கையால் மட்டுமே.
பேச்சு என்பது ஒரு கலை. என் குரல், சென்னை வானொலியில் பல நிகழ்ச்சிகளில் ஒலித்திருக்கிறது. அம்மாவும், அப்பாவும் என்னை புரிந்து கொண்டனர்.
என் அக்கா என்னை அவ்வப்போது சந்திப்பார். என் அண்ணன் மட்டும் என்னிடம் பேசி விட்டால், என் நம்பிக்கைக்கு உரம் போட்ட மாதிரி இருக்கும்.
கல்வி மட்டுமே மனித நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்று.
இதை தன்னம்பிக்கையோடு கடைப்பிடித்தால், உங்களுக்கான இருக்கை நிச்சயம் கிடைக்கும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்