Trumps obsession with campaigning is bloodshed if I lose | நான் தோற்றால் ரத்தக்களரி தான் பிரசாரத்தில் டிரம்ப் ஆவேசம்

வாஷிங்டன்: ”அமெரிக்க அதிபர் தேர்தலில் நான் வெற்றி பெறவில்லை எனில், நாடே ரத்தக்களரியாக மாறும்,” என, முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனை எதிர்த்து, குடியரசு கட்சி வேட்பாளரும், முன்னாள் அதிபருமான டொனால்டு டிரம்ப் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.

இந்நிலையில், ஒஹியோ மாகாணத்தில் உள்ள வாண்டாலியாவில், டிரம்ப் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

நவம்பர் 5ம் தேதியை மறந்துவிடாதீர்கள். நம் நாட்டின் வரலாற்றில் மிக முக்கியமான ஒரு தேதி. இப்போது உள்ள மிக மோசமான அதிபர் ஜோ பைடனை வீட்டுக்கு அனுப்ப நீங்கள் வந்து ஓட்டளிக்க வேண்டும்.

ஒருவேளை இந்த தேர்தலில் நீங்கள் என்னை தேர்ந்தெடுக்கவில்லை என்றால், அது இந்த நாட்டையே ரத்தக்களரியாக மாற்றிவிடும்.

ஒருவேளை நான் வெற்றி பெற்றால், அவர்களால் தங்கள் கார்களை இங்கு விற்பனை செய்ய முடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.

அவர் எதை மனதில் வைத்து இப்படி பேசினார் என்பது தெளிவுபடுத்தப்படவில்லை. அதே நேரம், வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் கார் ஆலை அமைத்து, அங்கு தயாரிக்கப்படும் கார்களை அமெரிக்காவில் விற்பனை செய்ய சீனா திட்டமிட்டு உள்ளதாகவும், அதை மனதில் வைத்தே டிரம்ப் இப்படி பேசியதாகவும் கூறப்படுகிறது.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஜனநாயக கட்சி, ‘தீவிரவாத சிந்தனை, வன்முறையின் மீது பரிவு, பழிவாங்கும் வேட்கையுடன் இருக்கும் டிரம்ப், மீண்டும் ஒரு ஜன., 6 போன்ற சம்பவம் நடக்கவேண்டும் என நினைக்கிறார்.

ஏற்கனவே அவரை நிராகரித்த அமெரிக்க மக்கள், இந்த முறையும் அவரை தோற்கடிப்பர்’ என, அறிக்கை வெளியிட்டு உள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.