புதுடெல்லி: மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் ராஷ்ட்ரீய லோக் ஜனசக்தி கட்சிக்கு பிஹாரில் ஓர் இடம் கூட கொடுத்ததால், அக்கட்சியின் தலைவர் பசுபதி குமார் பராஸ் தனது மத்திய அமைச்சர் பதவியை செவ்வாய்க்கிழமை ராஜினாமா செய்துள்ளார்.
தனது ராஜினாமா குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பசுபதி குமார், “எனது கட்சிக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. கட்சியின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்த பின்னர் எனது அடுத்தக்கட்ட அரசியல் நகர்வு குறித்து அறிவிப்பேன்” என்று தெரிவித்தார். உணவு பதப்படுத்தும் துறையில் மத்திய அமைச்சராக இருந்த பசுபதி குமார், மறைந்த ராம் விலாஸ் பாஸ்வானின் சகோதர் ஆவார்.
பிஹாரின் ஹாஜிபூர் (தனித் தொகுதி) மக்களவைத் தொகுதியின் தற்போதைய எம்.பி.யான பசுபதி குமார் மீண்டும் அதே தொகுதியில் இருந்து 2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்பினார். ராம் விலாஸ் பஸ்வான் 8 முறை தேர்ந்தெடுக்கப்பட்டு சாதனை படைத்த இந்தத் தொகுதி, அவரது மகனான சிராக் பாஸ்வானுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
பிஹாரில் திங்கள்கிழமை நடந்த என்டிஏ கூட்டணியின் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில், சிராக் பாஸ்வான் தலைமையிலான எல்ஜே கட்சிக்கு ஹாஜிபூர் உட்பட 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, என்டிஏ கூட்டணி ஆட்சியில் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த ஒரே கூட்டணிக் கட்சித் தலைவரான பசுபதி குமார், தான் நடத்தப்பட்ட விதம் குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தும் முன்பு, “பிரதமர் மோடி சிறந்த தலைவர். அவருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்டிஏ கூட்டணிக்கு நான் விசுவாசமாக இருந்தேன். அதற்கு வெகுமதியாக அநீதியை பெற்றுள்ளேன்” என்றார்.
t1