புதுடெல்லி: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன், பிரதமர் மோடி நேற்று போனில் பேசினார். அப்போது ரஷ்ய அதிபர் தேர்தலில் புதின் மீண்டும் வெற்றி பெற்று 5-வது முறையாக அதிபரானதற்கு வாழ்த்து தெரிவித்தார்.
பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதினை நேற்று போனில் தொடர்பு கொண்டு பேசினார். ரஷ்யாவில் அதிபர் தேர்தலில் புதின் மீண்டும் வெற்றி பெற்று 5-வது முறையாக அதிபரானதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
வரும் ஆண்டுகளில் இரு நாடுகள் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்த ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொள்ள இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். பல விஷயங்களில் இருதரப்பு ஒத்துழைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும் அவர்கள் ஆய்வு செய்தனர். பிராந்திய மற்றும் சர்வதேச விஷயங்கள் குறித்தும். பரஸ்பர நலன் குறித்தும் தங்கள் கருத்துக்களை இரு தலைவர்களும் பகிர்ந்து கொண்டனர்.
ரஷ்யா-உக்ரைன் போர் குறித்து ஆலோசித்தபோது, தூதரக அளவில் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காண்பதே இந்தியாவின் நிலைப்பாடு என்பதை பிரதமர் மோடி மீண்டும் வலியுறுத்தினார்.