திருவனந்தபுரம்: டெல்லி முதல்வரைப் போல கேரள முதல்வர் பினராய் விஜயனும் மத்திய அமைப்புகளின் நடவடிக்கைக்கு ஆளாகலாம் என்ற எதிர்க்கட்சிகளின் பிரச்சாரம் குறித்து பயமில்லை என்று கேரளாவின் ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் தெரிவித்துள்ளது.
டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டு, அமலாக்கத் துறை காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளது கேரளாவிலும் எதிர்வினையை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி முதல்வர் போல கேரள முதல்வரும் மத்திய விசாரணை அமைப்புகளின் நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியது இருக்கும் என எதிர்க்கட்சிகள் தெரிவித்து வருகின்றன.
இது குறித்த கேள்விக்கு கேரள மாநில பொதுப் பணித் துறை அமைச்சரும், முதல்வரின் மருமகனுமான பி.ஏ.முகம்மது ரியாஸ் பதில் அளிக்கையில், “டெல்லி முதல்வரை கைது செய்திருப்பதன் மூலம் விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தனக்கான அரசியல் கருவியாக பயன்படுத்தி வருவது தெளிவாகியுள்ளது.
ஒருவேளை அமலாக்கத் துறை கேரளவுக்கு வந்தால், அப்போது பார்க்கலாம். கேரள மாநிலத்தின் மக்கள் அரசியல் விழிப்புணர்வு உள்ளவர்கள்” என்றார். மேலும், கேஜ்ரிவால் மீதான அமலாக்கத் துறை நடவடிக்கையில் காங்கிரஸ் கட்சி இரட்டை நிலைப்பாடு கொண்டுள்ளது என்றும் அக்கட்சியை விமர்சித்தார்.
இதனிடையே, கேஜ்ரிவாலின் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிபிஐ தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி நடத்திய போராட்டத்தை பாஜக விமர்சித்துள்ளது. இது குறித்து கேரள மாநில பாஜக தலைவர் கே.சுரேந்தரன் கூறுகையில், “இடது ஜனநாயக முன்னணியும், ஐக்கிய ஜனநாயக முன்னணியும் ஒரு பிரச்சினைக்காக ஒன்றிணைந்து போராடுவது வரலாற்றிலேயே இதுதான் முதல்முறை. ஊழல் செய்தவர்களை காப்பாற்றுவதற்காக ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் ஒன்றிணைந்துள்ளன.
ஊழல்வாதிகளுக்கு ஆதரவளிக்க இண்டியா கூட்டணிக் கட்சிகள் ஒன்றிணைந்துள்ளது இப்போது தெளிவாகிவிட்டது. பினராயி விஜயன் உள்ளிட்ட இரண்டு முன்னணியின் தலைவர்களும் வழக்குகளைச் சந்தித்து வருகின்றனர். வெள்ளிக்கிழமை எல்டிஎஃப்பும், யுடிஎஃப்பும் இணைந்து போரடியது ஊழல்வாதிகளின் ஒற்றுமையைக் காட்டுகிறது” எனத் தெரிவித்தார்.
மேலும் “மாநிலத்தின் வளர்ச்சியை ஊழல் பாதித்துவிட்டது. பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி அதற்கு எதிராக போராடி வருகிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை அமலாக்கத் துறை கைது செய்திருப்பதைக் கண்டித்து கேரளாவின் ஆளுங்கட்சியான சிபிஎம் மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸும் ஆர்ப்பாட்டம் நடத்தின. இந்தக் கைது நடவடிக்கையை கண்டித்திருந்த முதல்வர் பினராய் விஜயன், “தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சிகளின் குரல்களை ஒடுக்கும் முயற்சி இது” என்று குற்றம்சாட்டியிருந்தார்.