புதுடெல்லி: முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டிருப்பதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை போராட்டம் அறிவித்துள்ள நிலையில், தேசிய தலைநகரில் டெல்லி போலீஸார் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர்.
கேஜ்ரிவாலின் கைதைக் கண்டித்து ஆம் ஆத்மி தலைவர்கள், தொண்டர்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் பாஜக தலைமை அலுவலகம், ஐடிஒ சாலை, அமலாக்கத்துறை அலுவலகம் செல்லும் சாலைகளில் போலீஸார் ஏற்கனவே பல அடுக்கு தடுப்புகளை ஏற்படுத்தியுள்ளனர். சட்டம் ஒழுங்கு அமைதியை பேணும் வகையில் துணை ராணுவமும் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
“ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் போராட்டம் நடத்தலாம் என்று எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. சட்டம் ஒழுங்கு அமைதியை உறுதி செய்யும் வகையில் தேசிய தலைநகரில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளோம். டெல்லி போலீஸாருடன் துணை ராணுவமும் நிறுத்தப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்டங்களில் உள்ள நிலவரத்தை தொடர்ந்து கண்காணிக்குமாறு மூத்த அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.
தங்களின் மாவட்டங்களை தொடர்ந்து கண்காணிக்கவும், போராட்டம் பற்றி தகவல் தெரிந்தால், உயர்அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கவும் எஸ்ஹெச்ஓக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்” என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சி அமைச்சர் கோபால் ராய், “பாஜகவுக்கு எதிராக அனைத்துக் கட்சி எம்எல்ஏக்கள் மற்றும் தொண்டர்கள் ஷாஹீத் பூங்காவில் ஒன்று கூடி போராட்டம் நடத்துவார்கள். இந்த சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக பாஜக அலுவலகம் முன்பு போராட்டம் நடத்துமாறு நான் நாட்டு மக்களைக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். இந்தியா கூட்டணித் தலைவர்கள் மெழுகுவர்த்தி ஊர்வலம் மற்றும் உருவ பொம்மை எரிப்பில் கலந்து கொள்கிறார்கள்.
ஆம் ஆத்மி கட்சி மாநிலங்களவை உறுப்பினர் சந்தீப் பதாக் கூறுகையில், “இது ஆம் ஆத்மிக்கும் பாஜகவுக்குமான போராட்டம் இல்லை. இது நாட்டு மக்களுக்கும் பாஜகவுக்குமான போராட்டம். நாட்டில் தூய்மையான அரசியலை விரும்புபவர்களின் போராட்டம்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக டெல்லி மதுபான கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாக எழுந்த புகாரை அடுத்து, பதியப்பட்ட பணமோசடி வழக்கில் டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் கடந்த வியாழக்கிழமை அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை அவர் ரோஸ் அவன்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை மார்ச் 28ம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.