விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட திரைப்பட கலைஞர் ராதிகா சரத்குமார், சென்னையிலிருந்து இன்று காலை மதுரை வந்தார்.

மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்த சரத்குமார், ராதிகா ஆகிய இருவருக்கும் பாஜக-வினரும், அவர்களின் ஆதரவாளர்களும் மாலையிட்டு ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்றனர்.
விமான நிலையத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் ராதிகாவை அறிமுகப்படுத்தி பேசிய சரத்குமார், “பாரதிய ஜனதா கட்சி சொந்தங்களுக்கும் அதில் இணைந்த என் சொந்தங்களுக்கும் வணக்கம். விருதுநகர் வேட்பாளரை அறிமுகப்படுத்துவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.

அவரைத் தொடர்ந்து ராதிகா பேசும்போது, “விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட எனக்கு வாய்ப்பு அளித்த பாஜக மூத்த தலைவர்களுக்கும், மதிப்பிற்குரிய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.
விருதுநகர் எனக்கு புதிதல்ல, இங்கு வேட்பாளராக மக்களுக்காக நல்லது செய்வதற்காக எனக்கொரு வாய்ப்புளித்த அனைவருக்கும் என் சொந்தங்களுக்கும் நன்றி” என்றவரிடம்,
“விருதுநகர் தொகுதியில் தங்களுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?” என்ற கேள்விக்கு,
“அரசியல் எனக்கு புதிதல்ல, நிச்சயமாக எங்களுக்கு நல்ல வாய்ப்பு உள்ளது. சிறப்பாக செயல்படுவோம். அதே நேரம், நாங்கள் ஜெயித்து விடுவோம் என்று சொல்வது ரொம்ப ஈசி, நல்லா வேலை செய்யணும்” என்றார்.

`விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் களத்தில் இருக்கிறாரே…?’ என்ற கேள்விக்கு, “எல்லோருக்கும் என்னுடைய வாழ்த்துகள். போகப்போக பார்க்கலாம்” என்றார்.
`வெற்றி பெற்றால் நடிப்பை தொடர்வீர்களா?’ என்ற கேள்விக்கு, பதில் அளிக்காமல் சிரித்துவிட்டுச் சென்றவர், திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வழிபட்டு தேர்தல் பணிகளைத் தொடங்கினார்.