தேனி கெங்குவார்பட்டி அருகே ஜி.கல்லுப்பட்டியில் உள்ள பட்டாளம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், வேட்பாளர்களை அறிவித்தார்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த டி.டி.வி.தினகரன், “அமமுக வேட்பாளர்களாக தேனியில் டி.டி.வி.தினகரன் ஆகிய நானும், திருச்சியில் மாநகர் மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் ஆகியோரும் போட்டியிடுகிறோம்.
மூன்றாவது முறையாக மோடி மீண்டும் பிரதமராக வர உள்ளார். தேனி நாடாளுமன்றத் தொகுதிக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் பிரதமர் மோடி மூலம் பெற்றுத் தருவேன்.

சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு தேனி தொகுதியின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன். மக்கள் செல்வர் என்ற பட்டம் தேனி தொகுதி மக்கள் தான் வழங்கினார்கள். டிடிவி என்றால் தொகுதிக்கு தவறாமல் வருபவர் என்ற விளக்கமும் தேனியில்தான் அறிவித்தனர். அதிமுக-வை -போட்டியாக நான் கருதவில்லை.
கடந்த காலங்களில் திமுக தேர்தல் அறிக்கை அளித்து மக்களை ஏமாற்றியதுபோல, தற்போது ஏமாற்ற முடியாது. அனைத்து நாடுகளும் பணவீக்கத்தில் சிக்கியுள்ள நிலையில், மோடியின் ஆட்சியால் இந்தியா சிறப்பாக இருக்கிறது.

இங்கு நான் போட்டியிட வேண்டும் என் ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் அழைத்தனர். எனக்கு தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லாமல்தான் இருந்தேன். நான் இங்கு போட்டியிட ஓபிஎஸ் வழிவிட்டுள்ளார். அதிமுக-வை போட்டியாக நான் கருதவில்லை. வரும் காலங்களிலும் பாஜக-வுடன் அமமுக கூட்டணி தொடரும்” என்றார்.
பிரசாரத்தின்போது, “ஆர்.கே நகர் தொகுதியில் வெற்றி பெற்றதை போல் இங்கு என்னை வெற்றி பெற வைக்க வேண்டும். மோடி கூட்டணியில் நான் போட்டியிடுகிறேன். அனைத்து திட்டத்தை மோடியிடம் கூறி உங்களுக்கு பெற்று தருவேன்.

தேனி வளர்ச்சிக்கு வார்டு உறுப்பினர் போல் நான் செயல்பட்டேன் என உங்களுக்கு தெரியும். அதேபோல இப்போதும்உங்களுக்காக பணியாற்றுவேன்” என்றார்.