சென்னை யோகா மாஸ்டர் கொலையில், அவரிடம் பயிற்சி பெற்ற பெண்ணும், அவருடைய கணவருமே கைதாகியிருப்பது எதிர்பாராத ட்விஸ்ட்!
சென்னை கானத்தூர், ரெட்டிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன். இவர், செம்மஞ்சேரியில் இருக்கும் மாநகராட்சி பூங்காவில் யோகா பயிற்சி அளித்துவந்தார். கடந்த 13-ம் தேதி முதல் லோகநாதன் திடீரென மாயமானதால், அவருடைய மகன் அஜய் போலீஸில் புகாரளித்தார். கிட்டத்தட்ட ஒரு வார கால விசாரணைக்குப் பிறகே அவர் கொலைசெய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
கொலையின் பின்னணி குறித்து கானத்தூர் போலீஸாரிடம் விசாரித்தோம். “புகார் வந்ததும் மாயமான லோகநாதனின் நண்பர்கள், உறவினர்களிடம் விசாரித்தோம். யாருக்கும், எதுவும் தெரியவில்லை. லோகநாதனின் செல்போனை ஆராய்ந்தபோது, சோழிங்கநல்லூரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரிடம் அவர் அடிக்கடி பேசியிருப்பது தெரியவந்தது. அவரிடம் விசாரித்தபோது, ‘சில மாதங்களுக்கு முன்பு லோகநாதனிடம் யோகா கற்றுக்கொள்ளச் சென்றேன். என்னுடைய மகனும் அவரிடம் கராத்தே கற்றுவருகிறான். அவனுக்கு கிளாஸ் இருக்கிறதா என்று கேட்பதற்காகவே அழைத்திருந்தேன். வேறு எந்தத் தகவலும் எனக்குத் தெரியாது’ என்றார். அது நம்பும்படியாக இல்லாததால், அவரின் செல்போனை வாங்கிப் பார்த்தோம். அதில் குறிப்பிட்ட சில மெசேஜுகள் அழிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

விசாரணையைத் தீவிரப்படுத்திய பிறகே, ‘லோகநாதன் எனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததால், அவரைக் கொலைசெய்து விட்டோம்’ என்று கூறி அழுதார். யோகா பயிற்சிக்குச் சென்ற அந்தப் பெண்ணிடம் மாஸ்டர் லோகநாதன் ஆரம்பத்தில் கண்ணியமாகத்தான் நடந்திருக்கிறார். நாளடைவில் யோகா சொல்லிக் கொடுப்பதுபோல, கண்ட இடங்களில் கைவைத்து எல்லை மீறியிருக்கிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தபோது, ‘இதுதான் யோகாவின் ஆரம்ப நிலை… இதற்கே இவ்வளவு கூச்சப்பட்டால் குண்டலினி சக்தியை எப்படி மேலே எழுப்புவது?’ என்று பேசி அவருக்குப் பாலியல் தொல்லையும் கொடுத்திருக்கிறார். அவரின் செக்ஸ் டார்ச்சரைத் தாங்க முடியாமல், பயிற்சிக்குச் செல்வதையே நிறுத்தியிருக்கிறார் மஞ்சுளா (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). ஆனால், தொடர்ந்து அவருக்கு போன் செய்த லோகநாதன், ‘நீ மறுபடியும் பயிற்சிக்கு வரவில்லையென்றால், நமக்குள் நடந்த சம்பவத்தை உன் கணவரிடம் சொல்லிவிடுவேன்’ என்று மிரட்டியிருக்கிறார்.

மஞ்சுளா இது பற்றித் தன் கணவர் சுரேஷிடம் சொல்லி அழ, ஆத்திரமடைந்த அவர் லோகநாதனைக் கொலைசெய்யத் தன் நண்பர்களுடன் சேர்ந்து திட்டம் போட்டிருக்கிறார். லோகநாதனைத் தனது வீட்டுக்குத் தனியாக வரச் சொல்லி மனைவி மூலம் மெசேஜ் அனுப்பி, வந்ததும் லோகநாதனை சுரேஷும், அவரின் நண்பர்களும் உருட்டுக் கட்டையால் சரமாரியாகத் தாக்கியிருக்கிறார்கள். இதில் லோகநாதன் உயிரிழந்துவிட, அவரின் சடலத்தை யாருக்கும் தெரியாமல் கிணற்றில் வீசியிருக்கிறார்கள். கொலையாளிகள் அடையாளம் காட்டியதன் அடிப்படையில், நாவலூரை அடுத்த காரனையில் ஒரு கிணற்றிலிருந்து லோகநாதனின் சடலத்தை மீட்டோம். இந்த வழக்கில் மஞ்சுளா, அவருடைய கணவர் சுரேஷ், அவரின் நண்பர்கள் ஹரிதாஸ், சம்பத் ஆகியோரையும் கைதுசெய்திருக்கிறோம்” என்றனர்.
– எஸ்.மகேஷ்