நாகர்கோவில்: கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன், அதிமுக வேட்பாளர் பசலியான் நசரேத், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மரிய ஜெனிபர் ஆகியோர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. நாளையுடன் மனு தாக்கல் முடிவடைகிறது.
வேட்பு மனு தாக்கல் தொடங்கிய இரு நாட்களில் 2 பேர் மட்டும் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் நேற்று முக்கிய அரசியல் கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
குமரி மக்களவை தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் வந்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஸ்ரீதரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். எம்.ஆர்.காந்தி எம்எல்ஏ, பாஜக மாவட்ட தலைவர் தர்மராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

இதுபோல் அதிமுக சார்பில் போட்டியிடும் பசலியான் நசரேத்தும் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் அதிமுக மாவட்டச் செயலாளர் தளவாய் சுந்தரம் மற்றும் நிர்வாகிகள் வந்திருந்தனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மரிய ஜெனிபரும் அக்கட்சி நிர்வாகிகளுடன் வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்
இவர்கள் தவிர சுயேச்சை வேட்பாளர் தியோடர் சாம் மற்றும் இருவர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இவர்கள் 6 பேரையும் சேர்த்து இதுவரை 8 வேட்பாளர்கள் கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

மாவட்ட தேர்தல் அலுவலரான ஸ்ரீதரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ததால் நாகர்கோவிலில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வேட்புமனு தாக்கல் செய்ய வந்தவர்களை போலீஸார் பலத்த சோதனைக்கு பின்னரே ஆட்சியர் அலுவலகத்துக்குள் அனுமதித்தனர்.
வேட்பாளர்களுடன் 5 பேர் மட்டுமே செல்ல அனுமதி வழங்கப்பட்டது. . இதனால் ஆட்சியர் அலுவலகம் நேற்று பரபரப்பாக காணப்பட்டது.
விளவங்கோடு தொகுதி: இதுபோல் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கு விளவங்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் அதிமுக வேட்பாளர் ராணி, மாற்று வேட்பாளர் எட்வின் ராஜகுமார், சுயேச்சை வேட்பாளர் மோகன்குமார் ஆகிய 3 பேர் நேற்று வேட்புமனு தாக்கல் செ்ய்தனர்.
சொத்து மதிப்பு விவரம்:
பாஜக வேட்பாளர் பொன் ராதா கிருஷ்ணன்: அசையும் சொத்து ரூ.64,03,778, அசையா சொத்து ரூ.6,99,40,155.
அதிமுக வேட்பாளர் பசலியான் நசரேத்: அசையும் சொத்து ரூ.3,34,77,241, அசையா சொத்து ரூ.4,82,10,790.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மரிய ஜெனிபர்: அசையும் சொத்து ரூ.2,41,20,999. அசையா சொத்து ரூ.2,63,49,329 .