சென்னை சூப்பர் கிங்ஸ் அசத்தல் வெற்றி! வின்னிங் ஷாட்டை ருதுராஜை அடிக்கவிட்ட தோனி

சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ். டாஸ் வெற்றி பெற்றதும் சிஎஸ்கே கேப்டன் பவுலிங் செய்வதாக அறிவித்தார். முதல் ஓவரை வீச வந்த துஷார் தேஷ்பாண்டே யாரும் எதிர்பார்க்காத வகையில் பிலிப் சால்டை முதல் பந்திலேயே விக்கெட் எடுத்தார். கோல்டன் டக்கில் பிலிப் சால்ட் வெளியேற அப்போது முதலே கொல்கத்தா அணியின் சரிவு தொடங்கியது. முதல் கோணல் முற்றிலும் கோணலாக மாறியது. நரைன், அங்குரிஷ் ரகுவன்ஷி பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடினாலும் அவர்கள் இருவரும் அவுட்டான பிறகு வந்த வீரர்கள் யாரும் சிறப்பாக ஆடவில்லை. நரைன் 27, ரகுவன்ஷி 24 ரன்கள் எடுத்து அவுட்டாகினர்.

சிஎஸ்கே டாப் கிளாஸ் பவுலிங்

கேப்டன் ஸ்ரேயாஸ் 34 ரன்கள் எடுக்க 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்தது. அந்தளவுக்கு சிஎஸ்கேவின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. கச்சிதமான லைன் அன்ட் லென்தில் வீசி கொல்கத்தா பேட்ஸ்மேன்களை தடுமாற வைத்தனர். ஒரு தவறான பந்தைக் கூட போட்டுவிடக்கூடாது என்ற முனைப்புடன் சிஎஸ்கேவின் பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் வீசினர். துஷார்தேஷ் பாண்டே, ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளும், முஸ்தஃபிசூர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி கொல்கத்தா அணியை திணறடித்தனர். 

சென்னை சூப்பர் கிங்ஸ் அதிரடி பேட்டிங்

இதனையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேஸிங் இறங்கியது. முதல் இன்னிங்ஸில் அதிகமாக பந்து சுவிங் ஆன நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் பெரிதாக எதுவும் ஸ்விங் ஆகவில்லை. ஒருவேளை சிஎஸ்கே பவுலர்கள் ஸ்விங் செய்து வீசினார்களோ என்னவோ, கேகேஆர் பவுலர்களிடம் பெரிதாக ஸ்விங்கை பார்க்க முடியவில்லை. இதனால், சிஸ்கே பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர். ஓப்பனிங் இறங்கிய கேப்டன் ருதுராஜ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் அரைசதம் விளாசி 67 ரன்களுடன் களத்தில் இருந்தார். அதிரடியாக ஆடிய டேரி மிட்செல் 25 ரன்களும், ஷிவம் துபே 28 ரன்களும் எடுக்க 17.4 ஓவர்களில் சிஎஸ்கே அணி 141 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வின்னிங் ஷாட்டை விட்டுக்கொடுத்த தோனி

இதில் ஷிவம் துபேவின் 3 மெகா சிக்சர்களும் அடங்கும். அவர் ஆடிய விதத்தைப் பார்த்தபோது கேகேஆர் ஆடிய பிட்சில் தான் துபே விளையாடுகிறாரா? என்ற கேள்வி எழுந்தது. வெற்றிக்கு 3 ரன்கள் தேவைப்பட்டபோது துபே அவுட்டான நிலையில் தோனி களம் புகுந்தார். அவர் நினைத்திருந்தால் வின்னிங் ஷாட்டை இரண்டாவது பந்திலேயே அடித்திருக்க முடியும். ஆனால் சிங்கிள் எடுத்துக் கொடுத்து, மறுமுனையில் அரைசதம் அடித்து இருந்த கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டே அடிக்கட்டும் என விட்டுக் கொடுத்தார். பின்னர் ருதுராஜ் நான்கு அடித்து சிஎஸ்கே அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். ஐபிஎல் புள்ளிப் பட்டியலில் சிஎஸ்கே 4வது இடத்தில் நீடிக்கிறது.

 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.