அரசியலில் கத்துக்குட்டி யார்? – மின்னணு விளையாட்டு வீரர்களிடம் பிரதமர் மோடி கேள்வி

புதுடெல்லி: மின்னணு விளையாட்டு வீரர்கள் அனிமேஷ் அகர்வால், நமன் மாத்தூர், மிதிலேஷ் படங்கர், பயல் தாரே, தீர்த்த மேத்தா, கணேஷ் கங்காதர் மற்றும் அன்ஷு பிஷ்த் ஆகிய 7 இந்திய விளையாட்டு வீரர்கள் பிரதமருடனான கலந்துரையாடலில் பங்கேற்றனர். இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களிலும் வைரலாகிஉள்ளது.

இந்த கலந்துரையாடலில், விளையாடுவதற்கும் சூதாடுவதற்குமான வித்தியாசத்தை வீரர்களுக்கு பிரதமர் எடுத்துரைத்தார். மின்னணு விளையாட்டுத்துறையில் உள்ள சவால்கள் குறித்து பிரதமர் அலுவலகத்துக்கு தெரிவிக்கலாம் என்றும் பிரதமர் அப்போது அவர்களிடம் எடுத்துரைத்தார்.

வீரர்களிடம் பிரதமர் மோடி கூறியதாவது: நாட்டின் தேவைக்கேற்ப இந்த துறையை நாம் வடிவமைக்க வேண்டும். இத்துறை மூலம், இளைஞர்களுக்கு பல்வேறு வேலைவாய்ப்புகள் உருவாகின்றன. ஆகவே இந்ததுறை, ஒழுங்கமைக்கப்பட்ட, சட்டகட்டமைப்பின் கீழ் மேலும் வளரவேண்டும். இன்றைய கால கட்டத்தில் ஏராளமான குழந்தைகள் இந்த துறையை தேர்ந்தெடுத்துள்ளனர். அவர்களை நாம் தடுத்து நிறுத்தமுடியாது, ஆனால், அவர்களுக்கு தேவையான சரியான வழிகாட்டல்களை வழங்க முடியும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

வீரர்கள் தாங்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து பிரதமர் அலுவலகத்துக்கு இ-மெயில் மூலம் புகாராக அனுப்பவும் அவர் அப்போது ஆலோசனை வழங்கினார்.

இதையடுத்து, அறிவுசார் மின்னணு விளையாட்டுத் துறையை அங்கீகரித்ததற்கு இந்த துறை சார் வீரர்கள் பிரதமருக்கு பாராட்டுதெரிவித்தனர். அப்போது அரசியலில் யார் நூப் (Noob) அதாவது கத்துக்குட்டி யார் என்ற கேள்வியை பிரதமர் மோடி எழுப்பினார்.

இதுகுறித்து பிரதமர் மோடி கூறியதாவது: தேர்தல் பிரச்சாரத்தின்போது நூப் (Noob) என்ற வார்த்தையை நான் பயன்படுத்தினால், இவர் யாரைக் குறிப்பிடுகிறார் என்று பொதுமக்கள் ஆச்சரியம் அடைவார்கள். இந்த வார்த்தையை நான் இங்கு பயன்படுத்தினால் நான் ஒரு குறிப்பிட்ட நபர் குறித்து பேசுவதாக நினைத்துக் கொள்வீர்கள். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.