பிரதமர் மோடி நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரங்களுக்கு இடையில் தொடர்ச்சியாக தனியார் ஊடகங்களுக்கு சிறப்பு பேட்டியளித்துவருகிறார். அது போன்ற தனியார் ஊடகங்களுக்கு அளித்த பேட்டிகளில்தான், `பயாலஜிக்களாக நான் பிறந்திருக்க வாய்ப்பே இல்லை. பரமாத்மாதான் என்னை இந்த பூமிக்கு அனுப்பினார்’, `இந்து-முஸ்லிம் என ஒருபோதும் நான் அரசியல் செய்ததில்லை. அவ்வாறு நான் செய்யும் நாள் பொதுவாழ்கைக்கே தகுதியற்றவனாகிவிடுவேன்’ போன்ற கருத்துகளை மோடி தெரிவித்திருந்தார்.

அந்த வரிசையில், மறைந்த சுதந்திரப் போராட்ட தியாகி மகாத்மா காந்தி (Mahatma Gandhi) குறித்து தற்போது தனியார் ஊடகத்தில் பேசியிருக்கும் மோடி, “மகாத்மா காந்தி இந்த உலகில் ஓர் உயரிய ஆன்மா. இந்த 75 ஆண்டுகளில், மகாத்மா காந்தியைப் பற்றி உலகுக்கு தெரிவிக்க வேண்டியது நம் பொறுப்பு அல்லவா…
ஆனால், காந்தி திரைப்படம் உருவானபோதுதான் இந்த உலகில் முதன்முறையாக அவரைப் பற்றிய ஆர்வம் உண்டானது. அதுவரையில் காந்தியை யாருக்கும் தெரியாது. நாம் அதைச் செய்யவில்லை. மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலாவை உலகம் அறிந்திருக்கிறது என்றால், அவர்களைவிட காந்தியும் சற்றும் குறைந்தவரல்ல. இதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில், உலகம் முழுவதும் பயணம் செய்த பிறகு நான் இதைச் சொல்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

காந்தி பற்றிய மோடியின் இத்தகையப் பேச்சு, சமூக வலைதளங்களில் வைரலாவதுடன், காங்கிரஸ் தரப்பிலிருந்து விமர்சனங்களையும் பெற்று வருகிறது. குறிப்பாக காங்கிரஸ் எம்.பி ராகுல், “மகாத்மா காந்தியைப் பற்றித் தெரிந்துகொள்ள `முழு அரசியல் அறிவியல் (Entire Political Science)’ மாணவர் மட்டும்தான் காந்தி படத்தைப் பார்க்க வேண்டும்” என்று ட்வீட் செய்து மோடியை விமர்சித்திருக்கிறார்.
PM Modi’s educational degrees made public by Shri @AmitShah : BA from Delhi University & MA from Gujarat university. pic.twitter.com/6A4pzGXLRl
— BJP (@BJP4India) May 9, 2016
மோடியை முழு அரசியல் அறிவியல் மாணவர் என ராகுல் காந்தி குறிப்பிட்டதற்கான காரணம், மோடியின் முதுகலைப் பட்டம் குறித்து கேள்வியெழுந்தபோது, குஜராத் பல்கலைக்கழகத்தில் முழு அரசியல் அறிவியல் பாடப்பிரிவில் மோடி முதுகலை பட்டம் பெற்றதாக சான்றிதழ் ஒன்றை பா.ஜ.க வெளியிட்டிருந்தது. அதைக்குறிப்பிட்டுதான், முழு அரசியல் அறிவியல் மாணவர் மட்டுமே காந்தி படம் பார்த்து அவரைத் தெரிந்துகொள்ள வேண்டும் என ராகுல் விமர்சித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb