SA v NEP: கடைசி பந்தில் ட்விஸ்ட்; வெறும் 1 ரன் வித்தியாசத்தில் ஏமாந்த நேபாளம்!

“நேபாளம் அணியைப் பற்றி எங்களுக்கு அவ்வளவாக தெரியாது. ஆனால், எங்களின் அனலிஸ்டகள் கண்டிப்பாக அவர்களைப் பற்றி அறிந்திருப்பார்கள். நாங்கள் எந்த அணியையும் குறைத்து மதிப்பிட விரும்பவில்லை. கடந்த மூன்று போட்டிகளைப் போலத்தான் இந்தப் போட்டியையும் அணுகுவோம்” என நேபாளத்துக்கு எதிரான போட்டிக்கு முன்பான பத்திரிகையாளர் சந்திப்பில் தென்னாப்பிரிக்க வீரர் ரபாடா பேசியிருந்தார். இதைப் பார்க்கையில் ஒரு பெருந்தன்மையான பேச்சு, எப்படியும் தென்னாப்பிரிக்கா வென்றுவிடும் என்றே தோன்றியது. ஆனால், அப்படியில்லை. ரபாடா நேபாளத்திற்குக் கொடுத்த மதிப்பிற்கும் மரியாதைக்கும் அந்த அணி உரித்தானதுதான் எனக் காட்டியிருக்கிறது. ஆம், தென்னாப்பிரிக்காவுக்குத் தோல்வி பயத்தைக் காட்டிப் போராடி வெறும் 1 ரன் வித்தியாசத்தில் வீழ்ந்திருக்கிறது.

SA vs NEP

நியூயார்க்கை விட்டு வெளியே வந்தால் பேட்டிங்கிற்குச் சாதகமான பிட்ச்களை காணலாம் என்றே எதிர்பார்த்தனர். ஆனால், இந்தப் போட்டி நடந்த கிங்ஸ்டவுண் பிட்ச் முழுக்க முழுக்க ஸ்பின்னர்களுக்குச் சாதகமாக இருந்தது. நேபாளம் அணிதான் டாஸை வென்றிருந்தது. முதலில் பந்துவீசினர். தென்னாப்பிரிக்க அணி பேட்டிங். கடந்த 3 போட்டிகளில் நிதானமாக ஆடிய ஹேங் ஓவரிலிருந்து வெளியே வராததை போல ஆடினர். முதல் ஓவரில் லெக் பையில் ஒரு நான்கு ரன்கள் வந்திருந்தன. அவ்வளவுதான். ஆப் ஸ்பின்னர் தீபேந்திர சிங் வீசிய ஒரு ஓவரில் பவர்ப்ளேக்குள்ளாகவே அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார் டீகாக். முதல் விக்கெட் வேகமாக வீழ்ந்தாலும் அடுத்து கொஞ்சம் நிதானமாக நின்று ஆடினர்.

ரீஷா ஹென்றிக்ஸூம் மார்க்ரமும் 46 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர். அதிரடியெல்லாம் இல்லை. கொஞ்சம் பார்த்துதான் ஆடினர். சந்தீப் லமிச்சனே, குஷால் பூர்தெல் ஆகிய ஸ்பின்னர்கள் நன்றாக வீசினர். நிறைய டாட்கள் ஆட வைத்தனர். மார்க்ரமையும் க்ளாசனையும் பூர்தெல் அடுத்தடுத்த ஓவர்களில் வீழ்த்தினார். மார்க்ரம் போல்ட் ஆனார். க்ளாசென் வந்தவுடனேயே பெரிய ஷாட்டுக்குச் சென்று அவுட் ஆனார். இங்கிருந்து ஆட்டம் அப்படியே மாறத் தொடங்கியது.

Dipender Singh

ரீஷா ஹென்றிக்ஸையும் மில்லரையும் டீகாக்கை வீழ்த்திய தீபேந்திர சிங் வீழ்த்தினார். முக்கியமான பேட்டர்கள் எல்லாம் சொற்ப ரன்களில் காலி. ரீஷா ஹென்றிக்ஸ் 43 ரன்களை எடுத்திருந்தார். ஸ்டப்ஸ் 27 ரன்களை எடுத்திருந்தார். இவர்களின் ஆட்டத்தால்தான் தென்னாப்பிரிக்கா அணி 115 ரன்களையாவது எட்ட முடிந்தது.

Nepal

நேபாளம் அணிக்கு 116 ரன்கள் டார்கெட். எட்டக்கூடிய டார்கெட்தான் என்பதால் ஆரம்பத்திலிருந்தே நிதானமாக ரொம்பவே கால்குலேட்டிவ்வாக ஆடி வந்தனர். பவர்ப்ளேயில் விக்கெட்டே விடாமல் 32 ரன்களைச் சேர்த்தனர். இதன்பிறகுதான் பிரச்னை ஆரம்பித்தது. ஷம்சி வந்த வேகத்திலேயே 2 விக்கெட்டுகளை ஒரே ஓவரில் வீழ்த்தினார். ஓப்பனர் பூர்தெலும் நம்பர் 3-ல் ரோஹித் பாடெலும் காலி. ஓப்பனர் ஆசிப் ஷேக்கும் அனில் ஷாவும் அடுத்ததாக ஒரு கூட்டணி அமைத்தனர்.

இந்த கூட்டணியும் சிறப்பாக இலக்கை நோக்கி முன்னேறியது. இருவரும் இணைந்து 50 ரன்களை சேர்த்திருந்தனர். ஸ்பின்தான் வேலைக்கு ஆகும் என்பதால் மார்க்ரமே பந்தை கையில் எடுத்தார். இந்த மூவும் நல்ல ரிசல்ட்டைக்க் கொடுத்தது. நன்றாக ஆடிக்கொண்டிருந்த அனில் ஷாவின் விக்கெட் வீழ்ந்தது. ஷம்சி, மார்க்ரம் நெருக்கி வீச நோர்கியாவும் விக்கெட் எடுக்க நேபாளம் தடுமாறியது. 85-2 என்ற நிலையிலிருந்து 100-6 என்ற நிலைக்குச் சென்றது.

Nepal

தென்னாப்பிரிக்கா வெற்றியை நோக்கி நகர்வதைப் போலத் தெரிந்தது. போட்டி பரபரப்பானது. 19வது ஓவரின் கடைசிக்கு முந்தைய பந்தில் சோம்பல் 105 மீட்டருக்கு மேல் ஒரு சிக்ஸரைப் பறக்கவிட்டார். அடுத்த பந்தில் இரண்டு ரன்கள் எடுத்தார். இப்போது கடைசி ஓவரில் 8 ரன்கள் தேவை. குல்ஷன் ஜா என்கிற பேட்டர் ஸ்ட்ரைக்கில். பார்டமன் கையில் பந்து. முதல் இரண்டு பந்துகளிலும் பெரிய ஷாட்டுக்கு முயன்று பீட்டன் ஆனார். நேபாளம் ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்தனர். ஆனால், குல்ஷன் ஜா அடுத்த பந்தை கவர்ஸில் அட்டகாசமான பவுண்டரி ஆக்கினார். அதற்கடுத்த பந்தில் இரண்டு ரன்கள்.

கடைசி பந்தில் ரன் அவுட்

இப்போது 2 பந்துகளில் 2 ரன்கள் தேவை. கடைசிக்கு முந்தைய பந்தையும் குல்ஷன் தவறவிட்டார். கடைசி பந்திலும் அதே கதை. ஆனாலும் ஒரு ரன்னுக்காக ஓடினார். டீகாக் பந்தைப் பிடித்து வீச நான் ஸ்ட்ரைக்கர் முனையில் அது குல்ஷன் ஜா முதுகில் பட்டு திசை மாறி ஸ்டம்புக்கு அருகே நின்ற க்ளாசனின் கைக்குச் செல்ல, அவர் எளிதாக அவுட் ஆக்கிவிட்டார். அந்த பந்து வேறு எங்காவது சென்றிருந்தால் கூட குல்ஷன் தப்பித்திருப்பார். மேலும் அவுட் ஆகிவிடுவோம் என்கிற தயக்கத்தில்தான் ஓடினார். தீவிரமாக முழுமையான முனைப்போடு ஓடியிருந்தால் நேபாளம் போட்டியை டை ஆக்கி சூப்பர் ஓவருக்கு கொண்டு சென்றிருக்கும்.

இப்போது வெறும் 1 ரன்னில் தோற்றிருக்கிறது.

“இங்கே என்ன வேண்டுமானாலும் நடந்திருக்கலாம். ஆனால், இந்த இரவு நேபாளம் அணியுடையது. அவர்கள் கலக்கிவிட்டார்கள்” என வர்ணனையில் ஒரு குரல் ஒலித்துக்கொண்டிருந்தது. ரசிகர்களின் எண்ணமும் அதுதான்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.